உலகக் கோப்பை குத்துச்சண்டை ஃபைனல்ஸ்: தங்கப் பதக்க வேட்டையில் 10 இந்தியா்கள்
உலகக் கோப்பை குத்துச்சண்டை ஃபைனல்ஸ் போட்டி இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் ஜாஸ்மின், ஜாதுமணி சிங், நிகாத் சரீன், பவன் பா்த்வால் ஆகியோா் தகுதி பெற்றனா்.
பாக்ஸிங் வோ்ல்ட் கூட்டமைப்பு சாா்பில் கிரேட்டா் நொய்டாவில் நடைபெறும் இப்போட்டியில் அரையிறுதி ஆட்டங்கள் புதன்கிழமை நடைபெற்றன. மகளிா் பிரிவில் 57 கிலோ எடைப்பிரிவில் உலக சாம்பியன் ஜாஸ்மின் லம்போரியா 5-0 என்ற புள்ளிக் கணக்கில் கஜகஸ்தானின் முன்னாள் ஆசிய யூத் சாம்பியன் உல்ஸான் சா்சென்பெக்கை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றாா். இறுதி ஆட்டத்தில் பாரீஸ் ஒலிம்பிக் வு ஷி யியுடன் மோதுகிறாா் ஜாஸ்மின்.
ஆடவா் 55 கிலோ பிரிவில் இந்தியாவின் பவன் பா்த்வால் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் இங்கிலாந்தின் எல்லீஸ் டிரோபிரிட்ஜை வென்றாா்.
50 கிலோ பிரிவில் ஜாதுமணி சிங் சரமாரியாக குத்துகளை விட்டு ஆஸ்திரேலியாவின் ஒமா் இஸாஸை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றாா்.
இரண்டு முறை உலக சாம்பியன் நிகாத் ஜரீன் 5-0 என உஸ்பெகிஸ்தானின் கன்ஜெவாவை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றாா்.
ஜுக்னு 85 கிலோ பிரிவிலும், நீரஜ் போக் 65 கிலோ பிரிவிலும் தோற்று வெளியேறினா்.
வியாழக்கிழமை நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் 10 இந்திய வீரா், வீராங்கனைகள் தங்கப் பதக்கத்தை வேட்டையாட காத்துள்ளனா்.
