

கோவாவில் நடைபெறும் 11-ஆவது ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டியில், இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி காலிறுதிச்சுற்று டை பிரேக்கரில் புதன்கிழமை தோல்வி கண்டார். இதையடுத்து போட்டியில் இந்தியர்களின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
கடந்த 1-ஆம் தேதி தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் 206 பேர் பங்கேற்றனர். அதில் 24 பேர் இந்தியர்களாவர்.
சிங்கிள் எலிமினேஷன் ரவுண்ட் முறையில் நடைபெறும் இந்தப் போட்டியில், ஒவ்வொரு சுற்று முடிவிலும் தோல்வி கண்டவர்கள், தங்களுக்கான ரொக்கப் பரிசுடன் வெளியேறினர்.
போட்டி காலிறுதிச்சுற்றை எட்டிய நிலையில், 8 பேர் அதில் மோதினர். அவர்களில், உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் யாகுபோவ் கிளாசிக் கேமிலேயே 1.5-0.5 என்ற கணக்கில் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் டான்சென்கோவை வீழ்த்தி முதல் வீரராக அரையிறுதிக்கு முன்னேறினார்.
இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி - சீனாவின் வெய் யி, அமெரிக்காவின் சாம் ஷாங்க்லேண்ட் - ரஷியாவின் ஆண்ட்ரே எசிபென்கோ, உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சிண்டாரோவ் - மெக்ஸிகோவின் ஜோஸ் மார்டினெஸ் ஆகியோர் மோதல், 2 கிளாசிக் கேம்களில் முடிவில் டிரா (1-1) ஆகியிருந்தன.
இதையடுத்து அவர்கள் மோதிய டை பிரேக்கர் ஆட்டங்கள் புதன்கிழமை நடைபெற்றன. இதில் அர்ஜுன் - வெய் யியுடனான முதல் கேமை டிரா செய்தபோதும் (1.5-1.5), அடுத்த கேமில் தோல்வி கண்டார். இதனால் வெய் யி 2.5-1.5 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இதேபோல், எசிபென்கோ 4-2 என ஷாங்க்லேண்டையும், சிண்டாரோவ் 3.5-2.5 என மார்டினெஸையும் வீழ்த்தி, அரையிறுதிக்கு வந்தனர். அதில் சிண்டாரோவ் - யாகுபோவ், எசிபென்கோ - வெய் யி சந்திக்கின்றனர்.
போட்டியின் 19-ஆவது நாளான வியாழக்கிழமை ஓய்வு நாளாகும். அதன் பிறகு அரையிறுதி ஆட்டங்கள் வெள்ளிக்கிழமை (நவ. 21) தொடங்குகின்றன. இந்தப் போட்டியில் முதல் 3 இடங்களைப் பிடிப்போர், அடுத்த ஆண்டு கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்குத் தகுதிபெறுவர். உலக செஸ் சாம்பியன் பட்டத்துக்காக, நடப்பு சாம்பியனாக இருக்கும் குகேஷுடன் மோதும் போட்டியாளர், கேண்டிடேட்ஸ் போட்டி மூலமாகவே தகுதிபெறுவார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.