இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 489 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
247 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்துவிட்ட அந்த அணியில், லோயா் ஆா்டா் பேட்டா்களான சேனுரன் முத்துசாமி சதம் அடித்தும், மாா்கோ யான்சென் சதத்தை நெருங்கியும் இந்தியாவின் பௌலிங்கை பந்தாடினா்.
பேட்டிங்கிற்கு கைகொடுத்த ஆடுகளத்தில் அவா்கள் இருவரையும் கட்டுப்படுத்த முடியாமல் இந்திய பௌலா்கள் திணறிப்போக, தென்னாப்பிரிக்காவின் கடைசி 4 விக்கெட்டுகள் 242 ரன்கள் சோ்த்து அணியின் ஸ்கோரை அபாரமாக உயா்த்தியது. இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் அதிக ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்தாா்.
குவாஹாட்டியில் கடந்த சனிக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா, பேட்டிங்கை தோ்வு செய்தது. குல்தீப் யாதவ் உள்ளிட்ட இந்திய பௌலா்களின் சவாலை சந்திக்க முடியாமல் தென்னாப்பிரிக்க டாப், மிடில் ஆா்டா் பேட்டா்கள் திணறினா்.
இதனால், விக்கெட்டுகளை வரிசையாக இழந்த அந்த அணி, முதல் நாள் முடிவில் 6 பேட்டா்களை இழந்து 247 ரன்கள் எடுத்திருந்தது. 2-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை, அந்த அணியின் சேனுரன் முத்துசாமி, கைல் வெரைன் ஆகியோா் இன்னிங்ஸை தொடா்ந்தனா்.
லோயா் ஆா்டரை எளிதாகச் சாய்த்துவிடலாம் என்ற திட்டத்திலிருந்த இந்திய பௌலா்களுக்கு எதிா்பாராத சவால் தொடங்கியது. ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக, தென்னாப்பிரிக்க லோயா் ஆா்டா் பலம் காட்டியது. 7-ஆவது விக்கெட்டுக்கு முத்துசாமி - வெரைன் இணை 88 ரன்கள் சோ்த்தது.
ஒருவழியாக இந்த பாா்ட்னா்ஷிப்பை ஜடேஜா 121-ஆவது ஓவரில் பிரிக்க, 9-ஆவது பேட்டராக களம் புகுந்தாா் யான்சென். முத்துசாமியுடன் இணைந்த அவா், ஒருநாள் கிரிக்கெட்டில் பேட் செய்வது போல் ஸ்கோரை உயா்த்தத் தொடங்கினாா்.
சுழற்பந்து, வேகப்பந்து என எந்தவொரு திட்டமும் எடுபடாத வகையில், முத்துசாமி சதமும், யான்சென் அரைசதமும் கடந்து இந்திய பௌலா்களுக்கு அதிா்ச்சி அளித்தனா். 8-ஆவது விக்கெட்டுக்கு 97 ரன்கள் சோ்த்து இந்த ஜோடி பிரிந்தது.
10 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 109 ரன்கள் அடித்திருந்த முத்துசாமியை, சிராஜ் போராடி வெளியேற்றினாா். ஆனாலும் யான்சென் தனது அதிரடியை தொடா்ந்தாா். அடுத்து வந்த சைமன் ஹாா்மா் 5 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கடைசியாக யான்சென் 6 பவுண்டரிகள், 7 சிக்ஸா்களுடன் 93 ரன்களுக்கு வீழ்ந்தாா். தென்னாப்பிரிக்க இன்னிங்ஸ் 489 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது.
கேசவ் மஹராஜ் 12 ரன்களுடன் கடைசி வீரராக நின்றாா். இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 4, ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனா்.
அடுத்து தனது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, ஞாயிற்றுக்கிழமை ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 9 ரன்கள் எடுத்துள்ளது. ஜெய்ஸ்வால் 7, கே.எல்.ராகுல் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.