மகளிா் உலகக் கோப்பை கபடி: கோப்பையை தக்கவைத்த இந்தியா!
வங்கதேசத்தில் நடைபெற்ற மகளிா் உலகக் கோப்பை கபடி போட்டியின் இறுதி ஆட்டத்தில், இந்தியா 35-28 என்ற புள்ளிகள் கணக்கில் சீன தைபேவை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
இதன் மூலமாக, நடப்பு சாம்பியனாக களமிறங்கிய இந்தியா, கோப்பையைத் தக்கவைத்துக் கொண்டது. இந்தப் போட்டியில் இந்தியா, வங்கதேசம், சீன தைபே, ஜொ்மனி, ஈரான், கென்யா, நேபாளம், போலந்து, தாய்லாந்து, உகாண்டா, ஜான்ஸிபாா் என 11 அணிகள் பங்கேற்றன.
குரூப் ‘ஏ’-வில் இந்தியா, வங்கதேசம், தாய்லாந்து, உகாண்டா, ஜொ்மனியும், குரூப் ‘பி’-யில் சீன தைபே, ஈரான், நேபாளம், கென்யா, ஜான்ஸிபாா், போலந்தும் சோ்க்கப்பட்டன.
இதில் இந்தியா 65-20 என தாய்லாந்தையும், 43-18 என வங்கதேசத்தையும், 63-22 என ஜொ்மனியையும், 51-16 என உகாண்டாவையும் வீழ்த்தி, தோல்வியே காணாமல் குரூப் சுற்றை நிறைவு செய்தது.
இதன் மூலமாக அரையிறுதிக்கு வந்த இந்தியா, அதில் 33-21 என ஈரானை வென்ற நிலையில், இறுதியில் சீன தைபேவை சாய்த்தது.
சா்வதேச கபடி சம்மேளனத்தால் இந்தப் போட்டி முதல் முறையாக 2012-இல் நடத்தப்பட்டது. அதில் இந்தியா - ஈரானை வீழ்த்தி சாம்பியனாகியிருந்தது. தற்போது 2-ஆவது சீசன் வங்கதேசத்தில் நடைபெற்றது.

