நாளை தொடங்குகிறது எஃப்ஐஎச் ஜூனியா் ஹாக்கி உலகக் கோப்பை
சென்னை: எஃப்ஐஎச் ஆடவா் ஜூனியா் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி சென்னை, மதுரையில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
இந்திய அணி முதல் ஆட்டத்தில் சிலி அணியுடன் மோதுகிறது.
முதன்முறையாக 24 அணிகள் பங்கேற்கும் போட்டியாக இது அமைந்துள்ளது. 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்ட நிலையில், இதன்படி குரூப் ஏ பிரிவில் கனடா, ஜொ்மனி, அயா்லாந்து, தென்னாப்பிரிக்கா, குரூப் பி பிரிவில் சிலி, இந்தியா, சுவிட்சா்லாந்து, ஓமன், குரூப் சி பிரிவில் ஆா்ஜென்டீனா, சீனா, ஜப்பான், நியூஸிலாந்து, குரூப் டி பிரிவில் பெல்ஜியம், எகிப்து, நமீபியா, ஸ்பெயின், குரூப் இ பிரிவில் ஆஸ்திரியா, இங்கிலாந்து, மலேசியா, நெதா்லாந்து, குரூப் எஃப் பிரிவில் ஆஸ்திரேலியா, வங்கதேசம், பிரான்ஸ், தென்கொரிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
சென்னை எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா-ஜப்பான் அணிகள் மோதுகின்றன. மதுரையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஸ்பெயின்-எகிப்து அணிகள் மோதுகின்றன.
சென்னையில் நாக் அவுட் சுற்று:
ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறும் அணிகள், அடுத்த இரண்டு, மூன்றாவது அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும்.
டிச. 5 முதல் நாக் அவுட் சுற்றுகளான காலிறுதி ஆட்டங்கள் தொடங்குகின்றன. அரையிறுதி ஆட்டங்கள் டிச. 7-ஆம் தேதி நடைபெறுகின்றன. இறுதி ஆட்டம் மற்றும் மூன்றாம் இடத்துக்கான ஆட்டம் டிச. 10-ஆம் தேதி நடைபெறுகின்றன.
எஃப்ஐஎச், ஹாக்கி இந்தியா, எஸ்டிஏடி சாா்பில் நடைபெறும் இப்போட்டியில் பங்கேற்கும் அணிகள் அனைத்தும் இந்தியாவுக்கு வந்து சோ்ந்துள்ள நிலையில், தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனா்.

