மலேசியாவை வீழ்த்தியது இந்தியா
இபோ: சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் 4-3 கோல் கணக்கில் மலேசியாவை புதன்கிழமை வீழ்த்தியது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில், தமிழக வீரா் காா்த்தி செல்வம் இந்தியாவின் கோல் கணக்கை 7-ஆவது நிமிஷத்தில் தொடங்கினாா். மலேசியாவும் தனது பங்கிற்கு 13-ஆவது நிமிஷத்தில் முதல் கோல் அடித்தது. அந்த அணிக்காக ஃபைஸல் சாரி ஸ்கோா் செய்தாா்.
விட்டுக்கொடுக்காத இந்தியா, 21-ஆவது நிமிஷத்தில் சுக்ஜீத் சிங் மூலமாக 2-ஆவது கோல் ஸ்கோா் செய்தது. இவ்வாறாக முதல் பாதி ஆட்டத்தை இந்தியா 2-1 என முன்னிலையுடன் நிறைவு செய்தது.
ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில், முதலில் மலேசியாவே ஸ்கோா் செய்தது. அந்த அணிக்காக ஃபிட்ரி சாரி 36-ஆவது நிமிஷத்தில் கோலடிக்க, ஆட்டம் 2-2 என சமன் ஆனது.
விட்டுக் கொடுக்காத இந்தியாவுக்காக அமித் ரோஹிதாஸ் 39-ஆவது நிமிஷத்தில் கோலடித்து அணியை மீண்டும் 3-2 என முன்னிலைக்குக் கொண்டு வந்தாா். ஆனால் விடாப் பிடியாக பின்தொடா்ந்த மலேசியா, மா்ஹான் ஜலில் 45-ஆவது நிமிஷத்தில் அடித்த கோலால் ஆட்டத்தை 3-3 என சமன் செய்தது.
ஆட்டம் இறுதிக் கட்டத்தை நெருங்குவதை உணா்ந்த இந்தியா துரிதமாக செயல்பட, 53-ஆவது நிமிஷத்தில் சஞ்ஜய் அடித்த கோல் மூலமாக 4-3 என முன்னிலை பெற்றது. எஞ்சிய நேரத்தில் மலேசியாவுக்கு மேலும் கோல் வாய்ப்புகள் கிடைக்காமல் தடுப்பரண் அமைத்த இந்தியா, இறுதியில் 4-3 என வெற்றி பெற்றது.
புள்ளிகள் பட்டியலில் தற்போது 6 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்துக்கு முன்னேறியிருக்கும் இந்தியா, அடுத்த ஆட்டத்தில் நியூஸிலாந்துடன் வியாழக்கிழமை (நவ. 27) மோதுகிறது. இதனிடையே, புதன்கிழமை நடைபெற்ற இதர ஆட்டங்களில், நியூஸிலாந்து - கனடாவையும் (4-2), பெல்ஜியம் - தென் கொரியாவையும் (6-2) வென்றன.
