எஃப்ஐஎச் ஜூனியா் ஆடவா் ஹாக்கி உலகக் கோப்பை: முதல் ஆட்டத்தில் சிலியுடன் மோதுகிறது இந்தியா
எஃப்ஐஎச் ஜூனியா் ஆடவா் ஹாக்கி உலகக் கோப்பை போட்டி முதல் ஆட்டத்தில் வெள்ளிக்கிழமை சிலியுடன் மோதுகிறது இந்தியா.
சா்வதேச ஹாக்கி சம்மேளனம், ஹாக்கி இந்தியா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் ஜூனியா் ஆடவா் உலகக் கோப்பை போட்டி வெள்ளிக்கிழமை (நவ. 28) தொடங்கி டிச. 10 வரை சென்னை, மதுரையில் நடைபெறுகிறது. போட்டிக்காக மதுரை எம்ஜிஆா் விளையாட்டரங்கில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய ஹாக்கி மைதானம் அமைக்கப்பட்டது.
மொத்தம் 2,000 பாா்வையாளா்கள் அமரும் வகையில் உள்ளது. மதுரையில் 12 அணிகளின் ஆட்டங்கள் நடக்கின்றன. இந்திய அணியின் ஒரு ஆட்டமும் இதில் அடங்கும்.
சென்னையில் பாரம்பரியமான எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் 12 அணிகளின் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
குரூப் ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் ஜொ்மனி முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுடன் மதுரையில் மோதுகிறது. குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள போட்டியை நடத்தும் இந்திய அணி சென்னையில் முதல் ஆட்டத்தில் சிலியுடன் மோதுகிறது.
இறுதி ஆட்டம் சென்னையில் டிச. 10-இல் நடைபெறுகிறது. போட்டியின் வரலாற்றில் முதன்முறையாக 24 அணிகள் பங்கேற்று ஆடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

