

குவாஹாட்டி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இந்தியா 408 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை படு தோல்வியைச் சந்தித்தது.
இதன் மூலமாக, டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை இல்லாத மிகப்பெரிய தோல்வியை (ரன்கள் அடிப்படையில்) இந்தியா சந்தித்திருக்கிறது. அத்துடன், சொந்த மண்ணில் சுமார் ஓராண்டு இடைவெளியில் 2-ஆவது டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்திருக்கிறது.
தலைமைப் பயிற்சியாளர் கெளதம் கம்பீர் பொறுப்பேற்ற பிறகு, சொந்த மண்ணில் விளையாடிய 5 டெஸ்ட்டுகளிலுமே (நியூஸிலாந்து 3-0, தென்னாப்பிரிக்கா 2-0) இந்தியா தோல்வியைத் தழுவியிருக்கும் நிலையில், அவர் பலத்த விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறார்.
மறுபுறம் தென்னாப்பிரிக்க அணி, இந்தியாவில் கடந்த 25 ஆண்டுகளில் முதல் முறையாக டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியிருக்கிறது. அதையும் அந்த அணி 2-0 என முழுமையாகக் கைப்பற்றி, நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன் என்பதை நிரூபித்திருக்கிறது.
549 ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய இந்தியா, கடைசி நாளில் சொற்பமாக 140 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சாய் சுதர்சன், ரவீந்திர ஜடேஜா மட்டும் சற்று முனைப்பு காட்ட, தென்னாப்பிரிக்க தரப்பில் சைமன் ஹார்மர் 6 விக்கெட்டுகள் கைப்பற்றி இந்தியாவின் பேட்டிங் வரிசையை முற்றிலுமாகச் சரித்தார்.
முன்னதாக, குவாஹாட்டியில் கடந்த சனிக்கிழமை தொடங்கிய இந்த டெஸ்ட்டில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா 489 ரன்கள் குவிக்க, இந்தியாவோ 201 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 288 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா, 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 260 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.
இறுதியாக, 549 ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கி 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, செவ்வாய்க்கிழமை ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 27 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி நாளான புதன்கிழமை, சாய் சுதர்சன், குல்தீப் யாதவ் ஆகியோர் இந்தியாவின் இன்னிங்ஸை தொடர்ந்தனர்.
இதில் குல்தீப் 1 பவுண்டரியுடன் 5 ரன்களுக்கும், அடுத்து வந்த துருவ் ஜுரெல் 2 ரன்களுக்கும் 24-ஆவது ஓவரில் விடைபெற்றனர். மறுபுறம் சாய் சுதர்சன் அதிக பந்துகளை சந்தித்து தென்னாப்பிரிக்க பெளலர்களை சோர்வடையச் செய்யும் முயற்சியில் இருந்தார்.
6-ஆவது பேட்டராக வந்த கேப்டன் ரிஷப் பந்த் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 13 ரன்களுக்கே 32-ஆவது ஓவரில் பெவிலியன் திரும்ப, ஜடேஜா களம் புகுந்தார். இந்நிலையில், 139 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 14 ரன்கள் எடுத்திருந்த சுதர்சன், 48-ஆவது ஓவரில் சேனுரன் முத்துசாமி பெளலிங்கில், மார்க்ரமிடம் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்தார்.
தொடர்ந்து வந்த வாஷிங்டன் சுந்தர், ஜடேஜாவுடன் இணைந்தார். இவர்கள் கூட்டணி 7-ஆவது விக்கெட்டுக்கு 35 ரன்கள் சேர்த்த நிலையில், சுந்தர் 2 பவுண்டரிகளுடன் 16 ரன்களுக்கு விடைபெற்றார்.
9-ஆவது பேட்டர் நிதீஷ்குமார் ரெட்டி டக் அவுட்டாகி வெளியேற, அணியின் ஒரே நம்பிக்கையாக இருந்த ஜடேஜா 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 54 ரன்களுக்கு கேசவ் மஹராஜ் வீசிய 64-ஆவது ஓவரில் விக்கெட் கீப்பர் கைல் வெரைனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
முகமது சிராஜ் டக் அவுட்டாக, இந்தியாவின் ஆட்டம் 140 ரன்களுக்கு நிறைவடைந்தது. பும்ரா 1 ரன்னுடன் கடைசி பேட்டராக களத்தில் நின்றார். தென்னாப்பிரிக்க தரப்பில் சைமன் ஹார்மர் 6, கேசவ் மஹராஜ் 2, மார்கோ யான்சென், சேனுரன் முத்துசாமி ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
'நான் மட்டும் காரணமல்ல'
இங்கிலாந்து தொடரை டிரா (2-2) செய்த அணிக்கும், சாம்பியன்ஸ் கோப்பை வென்ற அணிக்கும் நான்தான் பயிற்சியாளராக இருந்தேன். எனவே, இந்தத் தோல்விக்கு ஒரு நபரையோ அல்லது ஒரு ஷாட்டையோ குற்றம் சொல்ல முடியாது. இதற்கான பொறுப்பு அனைவருக்குமானது. என் எதிர்காலம் குறித்த முடிவு பிசிசிஐ கையில் உள்ளது. நியூஸிலாந்து தொடருடன் ஒப்பிடுகையில், இந்தத் தொடரில் விளையாடிய இந்திய அணி, அவ்வளவாக அனுபவம் இல்லாதது. வரும் நாள்களில் இந்த அணி தன்னை மேம்படுத்திக் கொள்ளும். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
- கெளதம் கம்பீர் (இந்திய தலைமைப் பயிற்சியாளர்)
'தவறவிட்டோம்'
தென்னாப்பிரிக்க அணி எங்களைவிட நன்றாக விளையாடியது. சொந்த மண்ணில் விளையாடினாலும் உறுதியாக விளையாட வேண்டும் என்பதை இந்தத் தொடர் உணர்த்தியிருக்கிறது.
பேட்டிங்கில் நாங்கள் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அதுவே இந்தத் தொடரில் எங்களுக்குப் பாதகமாக அமைந்தது.
ஆட்டத்தை எங்களுக்குச் சாதகமாக மாற்றும் தருணங்கள் கிடைத்தும் அதைத் தவறவிட்டோம். நிச்சயமாக இந்த முடிவு ஏமாற்றம் அளிக்கக் கூடியதுதான். நாங்கள் ஒரு அணியாக இன்னும் மேம்பட வேண்டும்.
- ரிஷப் பந்த் (இந்திய கேப்டன்)
'எதிர்பார்க்கவில்லை'
இந்தியாவுக்கு வந்து 2-0 என டெஸ்ட் தொடரை முழுமையாகக் கைப்பற்றுவோம் என நினைத்துப் பார்க்கவில்லை. இதுவரை இதுபோன்ற தொடர்களில் தோல்வியின் பக்கம் இருந்த நிலையில், தற்போது வெற்றியின் பக்கம் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
ஆட்டத்தின் சூழலுக்கு ஏற்றவாறு விளையாடி, தன்னால் முடிந்ததை அணியின் வெற்றிக்குச் செய்ய வேண்டும் என ஒவ்வொரு வீரரும் நினைத்ததன் பலனாகவே நாங்கள் முன்னேறி வருகிறோம். ரபாடா இல்லாத நிலையில், ஹார்மர் இந்தத் தொடரில் எங்களின் முக்கிய வீரராக இருந்தார்.
- டெம்பா பவுமா (தென்னாப்பிரிக்க கேப்டன்)
இந்தியா சறுக்கல்...
இந்த டெஸ்ட் தொடர் தோல்வி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (டபிள்யூடிசி) இறுதி ஆட்டத்துக்குத் தகுதிபெறும் இந்தியாவின் வாய்ப்பை பாதித்தது.
டபிள்யூடிசி புள்ளிகள் பட்டியலில் இந்தியா 48.15 புள்ளிகள் சதவீதத்துடன் 5-ஆம் இடத்துக்கு சறுக்கியிருக்கிறது. முதல் இரு இடங்களைப் பிடிக்கும்
அணிகளே இறுதி ஆட்டத்துக்குத் தகுதிபெற முடியும்.
டபிள்யூடிசி அட்டவணையில் இதுவரை 9 டெஸ்ட்டுகளில் விளையாடியிருக்கும் இந்தியா, 4 வெற்றி, 4 தோல்வி, 1 டிராவை பதிவு செய்துள்ளது. இதற்கடுத்து இந்திய அணி, 2026 ஆகஸ்ட்டில் இலங்கையுடனும், அக்டோபர் - நவம்பரில் நியூஸிலாந்துடனும் டெஸ்ட் தொடர்களில் மோதுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.