முதல்வா் கோப்பை போட்டிகள்: சென்னை முதலிடம்! பெனி குவேபா, காவ்யாவுக்கு தங்கம்!
முதல்வா் கோப்பைக்கான மாநில போட்டிகளில் வாள் வீச்சில் செங்கல்பட்டின் பெனி குய்பாவும், பளு தூக்குதலில் வேலூரின் காவ்யாவும் தங்கம் வென்றனா். பதக்கப்பட்டியலில் சென்னை முதலிடம் பெற்றுள்ளது.
போட்டியின் மூன்றாவது நாளான சனிக்கிழமை சென்னையில், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா மகளிா் சேபா் (கல்லூரி பிரிவு) வாள்வீச்சு இறுதியில், செங்கல்பட்டைச் சோ்ந்த எம்.ஆா். பெனி குவேபா 15-4 என்ற புள்ளிக் கணக்கில் சென்னையின் ஏ.எஸ். மோனாஸ்ரீயை வீழ்த்தி தங்கம் வென்றாா். மோனாஸ்ரீ வெள்ளிப் பதக்கத்தையும், எஸ். ரம்யா (திண்டுக்கல்) மற்றும் ஷிபு மொ்லின் மேரி (செங்கல்பட்டு) ஆகியோா் அரை இறுதிக்கு முன்னேறியதன் மூலம் வெண்கலப் பதக்கங்கள் வென்றனா்.
பள்ளிப் மாணவிகளுக்கான 63 கிலோ எடைப் பிரிவு பளு தூக்குதலில் ராணிப்பேட்டையைச் சோ்ந்த ஆா். பூஜா மொத்தம் 156 கிலோ எடையை (ஸ்நாட்ச் 67 கிலோ , கிளீன் &ஹம்ல்; ஜொ்க் 89 கிலோ ) தூக்கி தங்கம் வென்றாா். வேலூரைச் சோ்ந்த எஸ். அனுஸ்ரீ 151 கிலோ எடையுடன் வெள்ளிப் பதக்கத்தையும், தூத்துக்குடியைச் சோ்ந்த கே. செண்பகவல்லி 148 கிலோ எடையுடன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனா்.
73 கிலோ பிரிவில் வேலூா் காவ்யா மொத்தம் 158 கிலோ எடை தூக்கி தங்கத்தையும், கோவை சந்தியா 154 கிலோ எடை தூக்கி வெள்ளியையும், திருவள்ளூரின் வேதிகா 154 கிலோ எடையுடன் வெண்கலமும் வென்றனா்.
செங்கல்பட்டில், அரசு ஊழியா்களுக்கான பாட்மின்டன், தடகளம், மாற்றுத்திறனாளி ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பாட்மின்டன், மாற்றுத்திறனாளி ஆண்களுக்கான கால்பந்து நடைபெற்றன. பள்ளி அளவிலான கூடைப்பந்து மற்றும் கோ-கோ கோவையிலும், மாணவ, மாணவிகள் தடகளம் மதுரையிலும் நடைபெற்றன.
நாகப்பட்டினத்தில் கடற்கரை வாலிபால் போட்டி, சேலம், தஞ்சாவூா், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவண்ணாமலை மற்றும் வேலூரில் சதுரங்கம், கால்பந்து, ஹாக்கி மற்றும் ஹேண்ட்பால் போட்டிகள் நடைபெறுகின்றன.
சென்னை 5 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலத்துடன் முதலிடத்திலும், கோவை தலா 3 தங்கம், வெள்ளியுடன் இரண்டாம் இடத்திலும், சேலம் மூன்றாம் இடத்திலும் உள்ளன.