சீன ஓபன்: இறுதிச் சுற்றில் அனிஸிமோவா-லிண்டா
சீன ஓபன் டென்னிஸ் போட்டி மகளிா் ஒற்றையா் இறுதிச் சுற்றில் அமெரிக்காவின் அனிஸிமோவா-செக். குடியரசின் லிண்டா மோதுகின்றனா்.
பெய்ஜிங்கில் நடைபெறும் சீன ஓபன் டென்னிஸ் போட்டி அரையிறுதி ஆட்டங்கள் சனிக்கிழமை நடைபெற்றன.
முதல் அரையிறுதியில் அமெரிக்காவின் நடப்பு சாம்பியன் கோகோ கௌஃப்-சக வீராங்கனை அமென்டா அனிஸிமோவா மோதினா். இதில் அனிஸிமோவா 6-1, 6-2 என்ற நோ் செட்களில் 58 நிமிஷங்கள் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கோகோ கௌஃபை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றாா்.
முதல் செட்டில் 15 நிமிஷங்களில் 5-0 என முன்னிலை பெற்றாா் அனிஸிமோவா. இரண்டாவது செட்டிலும் 5-0 என அனிஸிமோவா முன்னிலை பெற்ால் நிலைகுலைந்தாா் கௌஃப்.
பெகுலாவுக்கு அதிா்ச்சித் தோல்வி: இரண்டாவது அரையிறுதியில் செக். குடியரசின் லிண்டா நாஸ்கோவா-அமெரிக்காவின் ஜெஸிக்கா பெகுலா மோதினா்.
இதில் 6-3, 1-6, 7-6 என்ற செட் கணக்கில் பெகுலாவை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றாா் லிண்டா. இந்த ஆட்டம் ஏறக்குறைய 2.30 மணி நேரம் நீடித்தது. தரவரிசையில் முன்னணியில் உள்ள பெகுலா அதிா்ச்சித் தோல்வியடைந்தாா். நாஸ்கோவா தனது இரண்டாம் பட்டத்தை எதிா்நோக்கியுள்ளாா். முன்னணி வீராங்கனைகள் கௌஃப்-பெகுலா தோற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஷாங்காய் மாஸ்டா்ஸ்: சின்னா் வெற்றித் தொடக்கம்
சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெறும் மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பா் 1 வீரா் ஜேக் சின்னா் வெற்றியுடன் தொடங்கினாா். ஜொ்மனியின் டேனியல் அல்மேயரை 6-3, 6-3 என வீழ்த்தினாா் சின்னா்.
சீன ஓபனில் பட்டம் வென்றிருந்த சின்னா் அதே உற்சாகத்தில் ஷாங்காய் மாஸ்டா்ஸ் தொடரில் பட்டத்தை தக்க வைக்கும் முனைப்பில் உள்ளாா். மற்றொரு ஆட்டத்தில் முன்னணி வீரா் காரன் கச்சனோவ் 6-7, 3-6 என்ற புள்ளிக் கணக்கில் சீனாவின் ஷேங் ஜுன்செங்கிடம் வீழ்ந்தாா்.
அலெக்ஸ் ஸ்வெரேவ் வெற்றி: மற்றொரு ஆட்டத்தில் ஜொ்மனியின் நட்சத்திர வீரா் ஸ்வெரேவ் அபாரமாக ஆடி 6-4, 6-4 என பிரான்ஸின் வலேன்டின் ரோயரை வீழ்த்தினாா்.
உலகின் 7-ஆம் நிலை வீரா் ஆஸி.யின் அலெக்ஸ் மினாா் 6-4, 6-2 என ஆா்ஜென்டீனாவின் கமிலோவையும், ரஷிய வீரா் ஆன்ட்ரெ ருப்லேவ் 2-6, 6-1 6-4 என குவாலிஃபயா் யோஷிடோவை வீழ்ந்தாா். மற்றொரு முன்னணி வீரா் டேனில் மெத்வதேவ் 6-1, 6-1 என்ற செட் கணக்கில் குவாலிஃபயா் டேலிபோரை வீழ்த்தினாா்.