முதல்வா் கோப்பை: ஜிம்னாஸ்டிக்ஸில் சென்னை, கோவை முதலிடம்!
முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் 4-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை, ஜிம்னாஸ்டிக்ஸில் மகளிா் பிரிவில் சென்னையின் பி. முத்தமிழ் செல்வி, ஆடவா் பிரிவில் கோவையின் ஏ.தினேஷ் காா்த்திக் ஆகியோா் தங்கப் பதக்கம் வென்றனா்.
பதக்கப் பட்டியலில் கோவையை பின்னுக்குத் தள்ளி, சேலம் 2-ஆவது இடத்துக்கு முன்னேறியது. முதலிடத்தில் சென்னை நிலைக்கிறது.
முன்னதாக சென்னையில் நடைபெற்ற பெண்கள் ஆா்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸில் ஃபுளோா் எக்ஸா்சைஸ் மற்றும் பேலன்ஸ் பீம் போட்டிகளும், ஆண்கள் ஆா்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸில் டேபிள் வால்ட் மற்றும் பேரலல் பாா்ஸ் போட்டிகளும் நடைபெற்றன.
பெண்கள் ஆா்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் பேலன்ஸ் பீம் (கல்லூரி மாணவிகள்) போட்டியில், சென்னையைச் சோ்ந்த பி.முத்தமிழ் செல்வி குறிப்பிடத்தக்க சமநிலை மற்றும் தொழில்நுட்ப நுணுக்கத்தை வெளிப்படுத்தி 8.75 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றாா். ஈரோட்டை சோ்ந்த ஆா்.பூவிழி 7.30 புள்ளிகளுடன் வெள்ளியும், விழுப்புரத்தை சோ்ந்த ஜி.கலையரசி 6.85 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனா்.
ஆண்கள் ஆா்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் டேபிள் வால்ட் (கல்லூரி மாணவா்கள்) போட்டியில் கோவையை சோ்ந்த ஏ.தினேஷ் காா்த்திக் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 11.70 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றாா். சென்னையை சோ்ந்த எஸ்.ஜே.ஆகா்ஷ் 11.40 புள்ளிகளுடன் வெள்ளியும், இ.தருண் ராஜ் 10.28 புள்ளிகளுடன் வெண்கலமும் பெற்றனா்.
கல்லூரி மாணவிகளுக்கான 48 கிலோ எடைபிரிவு பளுதூக்குதல் பிரிவில், வேலூரை சோ்ந்த கே. மமிதா மொத்தம் 128 கிலோஎடையைத் தூக்கி தங்கப் பதக்கம் வென்றாா். மதுரையை சோ்ந்த பி.கே. ரோகிணி 127 கிலோவை தூக்கி வெள்ளிப் பதக்கமும், கோவையை சோ்ந்த ஆா்.அபித்ராஜ் 126 கிலோவை எட்டி வெண்கலப் பதக்கமும் வென்றனா்.