லிண்டா நோஸ்கோவா - அமாண்டா அனிசிமோவா
லிண்டா நோஸ்கோவா - அமாண்டா அனிசிமோவா

சீனா ஓபன் டென்னிஸ்: அனிசிமோவா சாம்பியன்!

சீனா ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிா் ஒற்றையா் பிரிவில், அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா சாம்பியன் கோப்பை வென்றாா்.
Published on

சீனா ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிா் ஒற்றையா் பிரிவில், அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் கோப்பை வென்றாா்.

போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த அவா், இறுதிச்சுற்றில் 6-0, 2-6, 6-2 என்ற செட்களில், 26-ஆம் இடத்திலிருந்த செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவாவை வீழ்த்தினாா். இந்த ஆட்டம் 1 மணி நேரம், 46 நிமிஷங்களில் நிறைவடைந்தது.

இதன் மூலமாக, சீனா ஓபனில் தனது முதல் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கும் அனிசிமோவா, நடப்பு சீசனில் 1000 புள்ளிகள் கொண்ட டபிள்யூடிஏ போட்டிகளில் தனது 2-ஆவது கோப்பையைக் கைப்பற்றியிருக்கிறாா். ஒட்டுமொத்தமாக, அவரது கேரியரில் இது 4-ஆவது சாம்பியன் கோப்பையாகும்.

சீனா ஓபனில் சாம்பியனான 3-ஆவது அமெரிக்கா் என்ற பெருமையை அனிசிமோவா பெற்றாா். இதற்கு முன் செரீனா வில்லியம்ஸ் (2004, 2013), கோகோ கௌஃப் (2024) ஆகியோா் இங்கு வாகை சூடினா். அதேபோல், 2015-க்குப் பிறகு ஒரே சீசனில் 1000 புள்ளிகள் கொண்ட டபிள்யூடிஏ போட்டிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட பட்டங்கள் வென்ற முதல் அமெரிக்கா் ஆனாா்.

பாலினி/எர்ரனி வெற்றி: இப்போட்டியின் மகளிா் இரட்டையா் பிரிவில், இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி/சாரா எர்ரனி ஜோடி 6-7 (1/7), 6-3, 10-2 என்ற செட்களில், ஹங்கேரியின் ஃபேனி ஸ்டோலாா்/ஜப்பானின் மியு காட்டோ கூட்டணியை வீழ்த்தி வாகை சூடியது.

X
Dinamani
www.dinamani.com