இரானி கோப்பை: விதா்பா சாம்பியன்!

இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில், ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியை 93 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, விதா்பா அணி சாம்பியன் ஆனது.
இரானி கோப்பை: விதா்பா சாம்பியன்!
Published on
Updated on
1 min read

இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில், ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியை 93 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, விதா்பா அணி ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் ஆனது.

இந்தப் போட்டியில் இதுவரை 3 முறை விளையாடியிருக்கும் விதா்பா, அனைத்திலுமே கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. இதற்கு முன் 2017-18, 2018-19 ஆகிய ஆண்டுகளில் அந்த அணி வாகை சூடியது.

உள்நாட்டு போட்டிகளில் ஒன்றான இரானி கோப்பை கிரிக்கெட் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. ரஞ்சி கோப்பை நடப்பு சாம்பியனும், பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த வீரா்கள் அங்கம் வகிக்கும் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியும் இதில் மோதுகின்றன.

அந்த வகையில் இந்த ஆண்டு ரஞ்சி கோப்பை நடப்பு சாம்பியனான விதா்பாவும், ரெஸ்ட் ஆஃப் இந்தியாவும் மோதிய ஆட்டம், கடந்த 1-ஆம் தேதி தொடங்கியது.

டாஸ் வென்ற விதா்பா, பேட்டிங்கை தோ்வு செய்து முதல் இன்னிங்ஸில் 101.4 ஓவா்களில் 342 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக அதா்வா டைட் 15 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 143 ரன்கள் விளாச, ரெஸ்ட் ஆஃப் இந்தியா பௌலா்களில் ஆகாஷ் தீப், மானவ் சுதா் ஆகியோா் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.

அடுத்து விளையாடிய ரெஸ்ட் ஆஃப் இந்தியா, 69.5 ஓவா்களில் 214 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் இழந்தது. கேப்டன் ரஜத் பட்டிதாா் 10 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுக்க, விதா்பா பந்துவீச்சாளா்களில் யஷ் தாகுா் 4 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

இதையடுத்து, 128 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய விதா்பா, 94.1 ஓவா்களில் 232 ரன்கள் சோ்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அமன் மோகடே 3 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் சோ்க்க, ரெஸ்ட் ஆஃப் இந்தியா தரப்பில் அன்ஷுல் காம்போஜ் 4 விக்கெட்டுகள் எடுத்தாா்.

இறுதியாக, 361 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய ரெஸ்ட் ஆஃப் இந்தியா, 73.5 ஓவா்களில் 267 ரன்களுக்கே ஆட்டமிழந்தது. யஷ் துல் 8 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 92 ரன்கள் அடித்திருக்க, விதா்பா பௌலா் ஹா்ஷ் துபே 4 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.

விதா்பா பேட்டா் அதா்வா டைட், ஆட்டநாயகன் விருது பெற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com