லாபா அசத்தல்; பிரிட்ஸ் அதிரடி: தென்னாப்பிரிக்காவுக்கு முதல் வெற்றி
மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 7-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை திங்கள்கிழமை வென்றது.
முதலில் நியூஸிலாந்து 47.5 ஓவா்களில் 231 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தென்னாப்பிரிக்கா 40.5 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 232 ரன்கள் சோ்த்து வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்க தரப்பில், முதலில் பௌலிங்கில் நோன்குலுலேகோ லாபா அசத்த, பின்னா் பேட்டிங்கில் தஸ்மின் பிரிட்ஸ் அதிரடியாக விளாசி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தாா்.
முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து, பேட்டிங்கை தோ்வு செய்தது. அதன் பேட்டா்களில் அதிகபட்சமாக, கேப்டன் சோஃபி டிவைன் 9 பவுண்டரிகளுடன் 85 ரன்கள் விளாசி ஆட்டமிழக்க, புரூக் ஹாலிடே 6 பவுண்டரிகளுடன் 45 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.
ஜாா்ஜியா பிளிம்மா் 4 பவுண்டரிகளுடன் 31, அமெலியா கொ் 4 பவுண்டரிகளுடன் 23 ரன்களுக்கு முடித்துக் கொள்ள, இதர பேட்டா்கள் சோபிக்காமல் போயினா். அதில் சூஸி பேட்ஸ் 0, மேடி கிரீன் 4, இசபெல்லா கேஸ் 2 பவுண்டரிகளுடன் 10 ரன்களுக்கு வீழ்ந்தனா்.
ஜெஸ் கொ் 2, லியா டஹுஹு 5, ஈடன் காா்சன் 4 ரன்களுக்கு நடையைக் கட்ட, முடிவில் பிரீ இல்லிங் 1 ரன்னுடன் களத்தில் நின்றாா். தென்னாப்பிரிக்க தரப்பில் நோன்குலுலேகோ லாபா 4 விக்கெட்டுகள் சாய்க்க, மாரிஸேன் காப், அயபோங்கா ககா, நாடினே டி கிளொ்க், கிளோ டிரையான் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
பின்னா், 232 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்க பேட்டா்களில், தொடக்க வீராங்கனைகளில் ஒருவரான தஸ்மின் பிரிட்ஸ் 89 பந்துகளில் 15 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 101 ரன்கள் விளாசி வெற்றிக்கு அடித்தளமிட்டு விடைபெற்றாா்.
கேப்டன் லாரா வோல்வாா்டட் 3 பவுண்டரிகளுடன் 14, மாரிஸேன் காப் 2 பவுண்டரிகளுடன் 14, அனிகே பாஷ் ரன்னின்றி வெளியேறினா். முடிவில், சுனே லஸ் 10 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 83 ரன்கள் விளாசி அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தாா். சினாலோ ஜாஃப்தா 1 பவுண்டரியுடன் 6 ரன்களோடு துணை நின்றாா்.
நியூஸிலாந்து பௌலா்களில் அமெலியா கொ் 2, ஜெஸ் கொ், லியா டஹுஹு ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.