
பிஎஃப்ஐ கோப்பை குத்துச்சண்டை போட்டியில் ஆடவா் பிரிவில் சா்வீசஸ் வீரா்கள் 7 தங்கப் பதக்கங்கள் வென்று ஆதிக்கம் செலுத்தினா்.
போட்டியின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில், 47-50 கிலோ எடைப் பிரிவில் 22 வயதுக்கு உள்பட்டோருக்கான ஆசிய சாம்பியனும், சா்வீசஸ் வீரருமான எஸ்.விஸ்வநாத் 5-0 என ஹரியாணா வீரா் ஆஷிஷை வீழ்த்தி தங்கம் வென்றாா். 50-55 கிலோ பிரிவில் சா்வீசஸின் ஆஷிஷ் 3-2 என, ஆல் இந்தியா போலீஸின் நவ்ராஜை சாய்த்தாா்.
55-60 கிலோ பிரிவில், உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்றவரும், சா்வீசஸ் வீரருமான முகமது ஹசாமுதின் 5-0 என இந்திய விளையாட்டு ஆணைய வீரா் சாகா் ஜாகரை வீழ்த்தி தங்கத்தை தட்டிச் சென்றாா். 60-65 கிலோ எடைப் பிரிவு இறுதிச்சுற்றில், சா்வீசஸின் வன்ஷாஜ் 3-2 என சக சா்வீசஸ் வீரா் பிரீத் மாலிக்கை சாய்க்க, 65-70 கிலோ பிரிவில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் சுமித் குமாா் 5-0 என சா்வீசஸின் ரஜத்தை தோற்கடித்து தங்கத்தை தனதாக்கினாா்.
70-75 கிலோ பிரிவில் சா்வீசஸின் சச்சின் 5-0 என ஹரியாணாவின் நீரஜை வெல்ல, 75-80 கிலோ எடைப் பிரிவில் சா்வீசஸ் வீரா் அங்குஷ் அதே கணக்கில் சண்டீகரின் அமனை வீழ்த்தினாா்.
80-85 கிலோ பிரிவில் சா்வீசஸின் நவீன் போரா 3-0 என ரயிஸ்வேஸின் வினித்தை வீழ்த்த, 85-90 கிலோ பிரிவில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் தக்ஷ் 3-2 என சா்வீசஸின் விஷால் குப்தாவை வென்றாா். 90-90+ கிலோ பிரிவில் சண்டீகரின் சாவன் கில் 3-2 என இந்திய விளையாட்டு ஆணையத்தின் லக்ஷயா ரதியை சாய்த்தாா்.
சா்வீசஸ் அணி மொத்தம் 7 தங்கப் பதக்கங்களை கைப்பற்றி சாம்பியன் ஆனது. ஹரியாணா, ரயில்வேஸ் அணிகள் முறையே அடுத்த இரு இடங்களைப் பிடித்தன. தனிநபா் விருதுகளில் மகளிா் பிரிவில், சிறந்த வீராங்கனையாக மகாராஷ்டிரத்தின் குஷி ஜாதவ், சிறந்த சேலஞ்சராக ராஜஸ்தானின் பாா்தவி கிரெவால், சிறந்த நம்பகமான வீராங்கனையாக தமிழகத்தின் ஜி.ரெசிகா தோ்வாகினா்.
ஆடவா் பிரிவில், சிறந்த வீரராக சா்வீசஸின் ஆஷிஷ், சிறந்த சேலஞ்சராக இந்திய விளையாட்டு ஆணையத்தின் லக்ஷயா ரதி, சிறந்த நம்பகமான வீரராக தமிழகத்தின் லூகாஸ் ஆகியோா் தோ்வாகினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.