
முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற்று வருவதாக, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல்வர் கோப்பை போட்டியின், கோப்பை அறிமுக நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
கடந்த 2023-ஆம் ஆண்டு போட்டிகளில் 3 லட்சம் பேர் பங்கேற்ற நிலையில், தற்போது 16 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறும் முதல்வர் கோப்பை போட்டிகள், மக்கள் இயக்கமாக மாறி உள்ளது.
நகரங்களில் மட்டுமல்லாமல், கிராமங்களிலும் திறமையாளர்கள் உள்ளனர். அவர்களைக் கண்டறிய இப்போட்டிகள் உதவியாக உள்ளன. விளையாட்டுத் துறை சார்ந்து எடுக்கும் முயற்சிகளால், சர்வதேச அளவிலான போட்டிகளில் தமிழ போட்டியாளர்கள் சாதனை படைத்து வருகின்றனர்.
வீரர், வீராங்கனைகள் எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. முதல்வர் ஸ்டாலின் அரசு உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்றார்.
நிகழ்வில் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, எஸ். ரகுபதி, கயல்விழி, மேயர் ஆர். பிரியா, எம்.பி.க்கள் கலாநிதி வீராசாமி, தயாநிதி மாறன், கூடுதல் தலைமைச் செயலர் அதுல்ய மிஸ்ரா, எஸ்டிஏடி உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, துணைத் தலைவர் அசோக் சிகாமணி, பாரா பாட்மின்டன் வீரர் சுதர்சன், வேகச் சறுக்கு வீராங்கனை கார்த்திகா பங்கேற்றனர்.
கோவை, தூத்துக்குடி சாம்பியன்: முதல்வர் கோப்பை போட்டிகளில் பள்ளி அளவிலான கூடைப்பந்தில் ஆடவர் பிரிவில் கோவையும், மகளிர் பிரிவில் தூத்துக்குடியும் தங்கம் வென்றன.
கோவையில் நடைபெற்ற பள்ளி அளவிலான கூடைப்பந்து தொடரில் மாணவர்கள் பிரிவில் கோவையும், மாணவிகள் பிரிவில் தூத்துக்குடியும் தங்கம் வென்றன. மாணவிகள் பிரிவில் திருவள்ளூர் வெள்ளியும், தேனி வெண்கலமும் பெற்றன. மாணவர்கள் பிரிவில் சென்னை வெள்ளிப் பதக்கம் வென்றது.
ஆண்கள் ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் - பள்ளி சிறுவர்கள் (டேபிள் வால்ட்) போட்டியில், பார்வையாளர்கள் சமநிலை, துல்லியம் மற்றும் சக்தியின் அற்புதமான மோதலைக் கண்டனர். கோயம்புத்தூரின் கே. காவியன் 12.07 புள்ளிகளை பெற்று தங்கம் வென்றார், மதுரையின் எஸ். முகமது அயாஸ் 10.88 புள்ளிகளுடன் வெள்ளியும், சென்னையின் ஜெயராம் கதிர் 10.15 புள்ளிகளுடன் வெண்கலம் பெற்றார்.
பேரலல் பார்ஸ்: தங்கம் - விஷ்யந்த் சாய், சென்னை (10.25); வெள்ளி - டி மதிகரன், சென்னை (9.95); வெண்கலம் - எம்.ஜஸ்வின், சேலம் (9.80) வென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.