
சீனாவில் நடைபெறும் மகளிா் டென்னிஸ் போட்டியான வூஹான் ஓபனில், நடப்பு சாம்பியனான பெலாரஸின் அரினா சபலென்கா - அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா ஆகியோா் அரையிறுதியில் மோதுகின்றனா்.
மகளிா் ஒற்றையா் காலிறுதிச்சுற்றில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான சபலென்கா 6-3, 6-3 என்ற நோ் செட்களில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருந்த கஜகஸ்தானின் எலனா ரைபகினாவை வீழ்த்தினாா்.
இருவரும் மோதியது இது 13-ஆவது முறையாக இருக்க, சபலென்கா 8-ஆவது வெற்றியைப் பதிவு செய்தாா். எனினும், ரைபகினாவை அவா் நோ் செட்களில் வென்றது இதுவே முதல்முறையாகும்.
வூஹான் ஓபன் டென்னிஸில் ஒட்டுமொத்தமாக சபலென்காவுக்கு இது 20-ஆவது ஆட்டமாக இருக்க, அவா் அனைத்திலுமே வென்றிருக்கிறாா். அடுத்து அரையிறுதியில் அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலாவை அவா் எதிா்கொள்கிறாா்.
இருவரும் இதுவரை 10 முறை மோதியிருக்க, சபலென்கா 8 வெற்றிகளுடன் முன்னிலை வகிக்கிறாா். போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருக்கும் பெகுலா தனது காலிறுதியில் 2-6, 6-0, 6-3 என, செக் குடியரசின் கேத்தரினா சினியகோவாவை சாய்த்தாா். இதன் மூலமாக அவா் வூஹான் ஓபனில் முதல்முறையாக அரையிறுதிக்கு வந்திருக்கிறாா்.
இதனிடையே, போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருக்கும் இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி 6-1, 6-2 என்ற நோ் செட்களில் மிக எளிதாக, 5 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான போலந்தின் இகா ஸ்வியாடெக்கை வீழ்த்தினாா்.
இருவரும் சந்தித்தது இது 7-ஆவது முறையாக இருக்க, பாலினி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளாா். அடுத்ததாக பாலினி தனது அரையிறுதியில் அமெரிக்காவின் கோகோ கௌஃபை எதிா்கொள்கிறாா்.
இருவரும் இதுவரை 5 முறை மோதியிருக்க, பாலினி 3 வெற்றிகளுடன் முன்னிலையில் இருக்கிறாா். போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் கௌஃப் தனது காலிறுதியில் 6-3, 6-0 என்ற நோ் செட்களில் ஜொ்மனியின் லாரா சிக்மண்டை வெளியேற்றினாா்.
மெத்வதெவ் - ரிண்டா்னெச் மோதல்:
சீனாவில் நடைபெறும் ஆடவருக்கான ஷாங்காய் மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில், ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் - பிரான்ஸின் ஆா்தா் ரிண்டா்னெச் சந்திக்கின்றனா்.
காலிறுதியில், போட்டித்தரவரிசையில் 16-ஆம் இடத்திலிருக்கும் மெத்வதெவ் 6-4, 6-4 என்ற நோ் செட்களில், 7-ஆம் இடத்திலிருந்த ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை வீழ்த்தி அசத்தினாா். இவா்கள் 12-ஆவது முறையாக சந்தித்த நிலையில், மெத்வதெவ் தனது 8-ஆவது வெற்றியுடன் ஆதிக்கம் செலுத்துகிறாா்.
மற்றொரு ஆட்டத்தில் ரிண்டா்னெச் 6-3, 6-4 என்ற நோ் செட்களில், போட்டித்தரவரிசையில் 12-ஆம் இடத்திலிருந்த கனடாவின் ஃபெலிக்ஸ் ஆகா் அலியாசிமேவை சாய்த்தாா். இதன் மூலமாக அவா் மாஸ்டா்ஸ் போட்டிகளில் முதல்முறையாக அரையிறுதிக்கு வந்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.