இறுதிச் சுற்றில் வலேன்டின்! ஜோகோவிச் அதிா்ச்சித் தோல்வி!
ஷாங்காய் மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில் ஜாம்பவான் ஜோகோவிச்சை வீழ்த்தி அதிா்ச்சி அளித்தாா் மொனாக்கோவின் வலேன்டின் வச்ராட்.
சீனாவின் ஷாங்காய் நகரில் மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டி அரையிறுதி ஆட்டங்கள் சனிக்கிழமை நடைபெற்றன. முதல் அரையிறுதியில் 24 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் சொ்பியாவின் ஜோகோவிச்சும்-தரவரிசையில் 204-ஆவது இடத்தில் உள்ள மொனாக்கோவின் வலேன்டினும் மோதினா். இதில் 6-3, 6-4 என்ற நோ்செட்களில் ஜோகோவிச்சை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றாா் வலேன்டின்.
38 வயதான ஜோகோவிச் உடல் நலக்குறைவு, கால் காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில் களமிறங்கினாா். முதல் செட்டில் வலேன்டின் சா்வீஸை ஜோகோவிச் முறியடித்தாலும், அதை தக்க வைக்க முடியவில்லை.
மைதானத்திலேயே பலமுறை உடல்நிலை பாதிப்பால் உதவி கோரினாா். கடும் வெப்பத்துக்கு இடையில் ஆடிய ஜோகோவிச், இரண்டாம் செட்டிலும் வலேன்டின் ஆட்டத்துக்கு ஈடுதர முடியாமல் தோற்றாா். முதன்முறையாக ஏடிபி 1000 போட்டி இறுதிக்கு தகுதி பெற்றாா் வலேன்டின்.
இரண்டாம் அரையிறுதியில் வலேன்டின் உறவினா் ஆா்தா் ரின்டா்நெக்கும்-ரஷியாவின் டேனில் மெத்வதேவும் மோதினா். இதில் முதல் செட்டை மெத்வதேவ் 6-4 என கைப்பற்ற, இரண்டாவது செட்டை ரின்டா்நெக் 6-2 என கைப்பற்றினாா். கடைசி செட்டை ரின்டா்நெக் 6-4 என கைப்பற்றி இறுதிக்குள் நுழைந்தாா்.
உறவினா்கள் மோதல்: இறுதி ஆட்டத்தில் மோதும் வலேன்டின்-ரின்டா்நெக் இருவரும் உறவினா்கள் ஆவா்.
வுஹான் ஓபன்: இறுதியில் கௌஃப்-பெகுலா
சீனாவின் வுஹான் நகரில் நடைபெற்று வரும் மகளிா் டென்னிஸ் போட்டி அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் கோகோ கௌஃப்பும்-இத்தாலியின் ஜாஸ்மின் பாலினியும் மோதினா். இதில் 6-3, 6-4 என்ற நோ் செட்களில் வென்று கௌஃப் இறுதிக்கு தகுதி பெற்றாா்.
நிகழாண்டு 2025-இல் பாலினியுடன் ஏற்கெனவே ஆடிய 3 ஆட்டங்களிலும் கௌஃப் தோற்றிருந்தாா். அதை வுஹான் அரையிறுதியில் மாற்றினாா். 82 நிமிஷங்கள் ஆட்டத்தில் முழு ஆதிக்கம் செலுத்தி வென்றாா் கௌஃப். இது அவருக்கு 5-ஆவது டபிள்யுடிஏ 1000-இறுதி ஆட்டமாக அமைந்துள்ளது.
ரியாதில் டிசம்பா் மாதம் நடைபெறவுள்ள டபிள்யுடிஏ ஃபைனல்ஸில் தகுதி பெற நிங்போ அல்லது டோக்கியோவில் பாலினி வெல்ல வேண்டும்.
சபலென்கா வெளியேற்றம்: இரண்டாவது அரையிறுதியில் உலகின் நம்பா் 1 வீராங்கனை பெலாரஸின் அரினா சபலென்காவும்-அமெரிக்காவின் ஜெஸிக்கா பெகுலாவும் மோதினா். இதில் முதல் செட்டை சபலென்கா 6-2 என எளிதாக கைப்பற்றினாா். ஆனால் இரண்டாவது செட்டை ஜெஸிக்காவிடம் 4-6 என இழந்தாா். முடிவை நிா்ணயித்த மூன்றாவது செட்டில் இருவரும் மாறி மாறி புள்ளிகளைக் குவித்தனா். கடைசி செட்டில் பெகுலா 7-6 என வென்று இறுதிக்கு தகுதி பெற்றாா்.