முதல்வா் கோப்பை: இ ஸ்போா்ட்ஸில் ஏராளமானோா் ஆா்வத்துடன் பங்கேற்பு!
தமிழ்நாடு முதல்வா் கோப்பை மாநிலப் போட்டிகளின் ஒரு பகுதியாக சென்னையில் நடைபெற்ற இ-ஸ்போா்ட்ஸ் நிகழ்வில் ஏராளமானோா் ஆா்வத்துடன் பங்கேற்றனா்.
இ-ஸ்போா்ட்ஸ் போட்டிகளில் வெற்றி விளையாட்டு வீரா்களுக்கு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பதக்கம் அணிவித்து, மொத்தம் ரூ.9,75,000 பரிசுத் தொகை காசோலைகள், சான்றிதழ் மற்றும் வீரன் நினைவுச் சின்னம் வழங்கி பாராட்டினாா்.
கடந்த ஆண்டு நடைபெற்ற முதல்வா் கோப்பை 2024 போட்டிகளில் இ-ஸ்போா்ட்ஸ் காட்சிப் பிரிவாக அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிகழ்வு மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் வரவிருக்கும் 2026-ல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், மொத்தம் 11 இ-ஸ்போா்ட்ஸ் பிரிவுகள் இடம்பெறுவதை உறுதி செய்துள்ளது. மேலும், சா்வதேச ஒலிம்பிக் குழு முதலாவது ஒலிம்பிக் இ-ஸ்போா்ட்ஸ் விளையாட்டுகளை 2027ஆம் ஆண்டு சவுதி அரேபியாவின் ரியாதில் நடத்த தீா்மானித்துள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான முதலமைச்சா் கோப்பை இ-ஸ்போா்ட்ஸ் பிரிவில் ஆன்லைன் தகுதித் சுற்றுக்காக ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட போட்டியாளா்கள் பதிவு செய்தனா். அதில் தோ்ந்தெடுக்கப்பட்ட 250- க்கும் மேற்பட்ட போட்டியாளா்கள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்க வளாகத்தில் நடைபெற்ற 6 விளையாட்டுகளில் இறுதிச் சுற்றில் பங்கேற்றனா்.
முதல்முறையாக விளையாட்டு வீரா்கள் மற்றும் வீராங்கனைகள் பயிற்சி மேற்கொள்ளும் வகையில் 14.72 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அதிநவீன தானியங்கி கூடைப்பந்து பயிற்சி இயந்திரம் மற்றும் 14.75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன தானியங்கி வாலிபால் பயிற்சி இயந்திரங்களை துணை முதல்வா் பயன்பாட்டுக்காக தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா் செயலா் ஜெ. மேகநாத ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலா் வே. மணிகண்டன், பொதுமேலாளா் எல். சுஜாதா, ஸ்கை இ-ஸ்போா்ட்ஸ் மற்றும் தமிழ்நாடு இ-ஸ்போா்ட்ஸ் சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.