
தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டம் 2025-இன் கீழ், புதிதாக அமையவுள்ள தேசிய விளையாட்டுகள் வாரியம் (என்எஸ்பி), தேசிய விளையாட்டுகள் தீர்ப்பாயம் (என்எஸ்டி), தேசிய விளையாட்டுகள் தேர்தல் குழு (என்எஸ்இபி) ஆகியவற்றுக்கான வரைவு விதிகளை மத்திய அரசு வகுத்துள்ளது.
இதுதொடர்பாக பொதுமக்களின் கருத்துகளை கோரி அமைச்சகத்தின் வலைதளத்தில் அந்த விதிகள் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:
தேசிய விளையாட்டுகள் வாரியம்: இந்த வாரியம், ஒரு தலைவர், இரு உறுப்பினர்கள் என 3 நபர்களைக் கொண்டதாக இருக்கும். பொது மற்றும் விளையாட்டு நிர்வாகத்தில் போதுமான அறிவு அல்லது அனுபவம் கொண்டவர்களாக அவர்கள் இருப்பார்கள். விளையாட்டுச் சட்டங்கள் மற்றும் துறை சார்ந்த இதர விவகாரங்களிலும் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்களுக்கான வயது வரம்பு 65. பதவிக்காலம் 3 ஆண்டுகள். இதில் எது முன்கூட்டியே வருகிறதோ, அத்துடன் அவர்களின் பதவிக்காலம் நிறைவடையும். ஒரு முறை நியமிக்கப்பட்டவருக்கு மேலும் 3 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்கப்படலாம். வாரியத்தில் அங்கம் வகிப்போர், அந்த காலகட்டத்தில் துறை சார்ந்த வேறு எந்தவொரு பதவியும் வகிக்கக் கூடாது.
வாரியத்தின் வரவு, செலவுக் கணக்குகளை நிதியாண்டு நிறைவடைந்து 3 மாதங்களுக்குள்ளாக மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரிக்கோ அல்லது அவரால் நியமிக்கப்படும் நபருக்கோ அனுப்பி வைக்க வேண்டும்.
இந்த வாரியத்துக்கான நியமனங்களை, தேடுதல்- தேர்வுக் குழு மேற்கொள்ளும். அமைச்சரவைச் செயலர் தலைமையிலான அந்தக் குழுவில், விளையாட்டுத் துறைச் செயலர், துறை சார்ந்த நிர்வாக அனுபவமிக்க ஒருவர், தேசிய விளையாட்டு விருதுகள் பெற்ற இருவர் அங்கம் வகிப்பர்.
தேசிய விளையாட்டுகள் தீர்ப்பாயம்: இந்தத் தீர்ப்பாயத்தின் உறுப்பினர்களுக்கான பதவிக்காலம் 4 ஆண்டுகள். அதிகபட்ச வயது வரம்பு 67. இதில் எது முன்கூடியே வருகிறதோ, அத்துடன் அவரின் பதவிக்காலம் நிறைவடையும். வீரர், வீராங்கனைகள், சம்மேளனங்கள் இடையேயான சச்சரவுகளுக்கு தீர்வு காண்பதாக இந்தத் தீர்ப்பாயம் இருக்கும்.
தேசிய விளையாட்டுகள் தேர்தல் குழு: தேசிய விளையாட்டுகள் சம்மேளனங்களின் தேர்தல்களை நடத்தும் இந்தக் குழுவில், குறைந்தபட்சம் 20 உறுப்பினர்கள் எப்போதும் இருப்பர்.
நிர்வாகத்தில் வீரர், வீராங்கனைகள்: ஒவ்வொரு சம்மேளனத்தின் பொதுக் குழுவிலும் 4 அல்லது அதிகமான எண்ணிக்கையில் முன்னாள் வீரர், வீராங்கனைகள் அங்கம் வகிக்க வேண்டும். அவர்கள் தேர்தல் மூலமாகவோ, நியமனங்கள் வாயிலாகவோ தேர்வாகலாம்.
சம்பந்தப்பட்ட வீரர், வீராங்கனைகள் தாங்கள் சார்ந்த விளையாட்டிலிருந்து ஓய்வுபெற்று ஓராண்டுக்குப் பிறகே நிர்வாக பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஒலிம்பிக் பதக்கம் வென்றவரோ அல்லது குறைந்தபட்சம் ஒரு ஒலிம்பிக் போட்டியிலாவது பங்கேற்றவரோ மட்டுமே தேசிய ஒலிம்பிக் கமிட்டியில் சேர்க்கப்படலாம். தேசிய விளையாட்டு விருது அல்லது உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்றிருந்தாலேயே ஒருவர் சம்மேளனத்தில் சேர்க்கப்படலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.