
சுல்தான் ஜோஹர் கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டியில் இந்தியா தனது 4-ஆவது ஆட்டத்தில் 2-4 கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் புதன்கிழமை தோல்வி கண்டது. போட்டியில் இந்தியாவுக்கு இது முதல் தோல்வியாகும்.
இந்த ஆட்டத்தில் முதலில் இந்தியாவே கோலடித்தது. அணிக்காக 22-ஆவது நிமிஷத்தில் கேப்டன் ரோஹித் ஸ்கோர் செய்தார். அந்த முன்னிலையுடனேயே இந்தியா முதல் பாதியை நிறைவு செய்தது. ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில் ஆஸ்திரேலியாவின் கை ஓங்கியது. 39-ஆவது நிமிஷத்தில் ஆஸ்கர் ஸ்ப்ருல் அந்த அணியின் கோல் கணக்கை தொடங்க, அடுத்த நிமிஷத்திலேயே ஆண்ட்ரு பேட்ரிக் அதை 2-ஆக அதிகரித்தார்.
இதனால் ஆஸ்திரேலியா 2-1 என முன்னிலை பெற்றது. இந்தியா தனக்கான அடுத்த கோல் வாய்ப்புக்கு முயற்சித்து வந்த நிலையில், ஆஸ்கர் ஸ்ப்ருல் மீண்டும் 51-ஆவது நிமிஷத்தில் கோலடித்து தனது அணியின் கணக்கை 3-ஆக அதிகரித்தார். அதே உத்வேகத்தில் டைலன் டெüனி 51-ஆவது நிமிஷத்தில் ஸ்கோர் செய்ய, ஆஸ்திரேலியா 4-1 என அபார முன்னிலை பெற்றது. இந்தியாவுக்கான ஆறுதலாக, கடைசி நிமிஷத்தில் அர்ஷ்தீப் சிங் ஒரு கோலடிக்க, இறுதியில் ஆட்டம் 2-4 என நிறைவடைந்தது.
புள்ளிகள் பட்டியலில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகளே இறுதி ஆட்டத்துக்கு முன்னேறும் நிலையில், தற்போது இந்தியா 7 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தில் உள்ளது. மலேசியாவுடன் வெள்ளிக்கிழமை (அக். 17) மோதும் கடைசி ரவுண்ட் ராபின் ஆட்டத்தில் இந்தியா வெல்லும் நிலையில், அந்த இடத்தை உறுதி செய்து இறுதிக்குத் தகுதிபெறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.