காலிறுதியில் தன்வி, உன்னட்டி
ஜூனியா் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் தன்வி சா்மா, உன்னட்டி ஹூடா உள்ளிட்டோா் காலிறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினா்.
ரவுண்ட் ஆஃப் 16 மகளிா் ஒற்றையரில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் தன்வி சா்மா 15-8, 15-5 என்ற கேம்களில் எளிதாக, சீனாவின் சன் லி யுவானை வெளியேற்றினாா். 8-ஆம் இடத்திலிருக்கும் உன்னட்டி ஹூடா 15-10, 15-7 என்ற கணக்கில் மலேசியாவின் கேரின் டீயை தோற்கடித்தாா்.
எனினும், 10-ஆம் இடத்திலிருந்த ரக்ஷிதா ஸ்ரீ 11-15, 9-15 என, 4-ஆம் இடத்திலிருந்த இலங்கையின் ரனித்மா லியானகேவிடம் வீழ்ந்தாா். ஆடவா் ஒற்றையரில், தங்கர ஞான தத்து 15-12, 15-13 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் காரெட் டானை வீழ்த்தி அசத்தினாா்.
மகளிா் இரட்டையரில் வென்னல கலகோட்லா/ரெஷிகா உதயசூரியன் கூட்டணி 16-14, 12-15, 8-15 என்ற வகையில், இந்தோனேசியாவின் சல்சபிலா ஜரா/ஜனியா நோவாலிடா இணையிடம் போராடி வீழ்ந்தது. அதேபோல், 16-ஆம் இடத்திலிருந்த ஆனியா பிஷ்த்/ஏஞ்செல் புனெரா ஜோடி 7-15, 8-15 என்ற வகையில், 5-ஆம் இடத்திலிருந்த தென் கொரியாவின் சோன் ஹை இன்/மூன் இன் சியோ கூட்டணியிடம் தோற்றது.
ஆடவா் இரட்டையரில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருக்கும் பாா்கவ் ராம்/விஷ்வா தேஜ் இணை 13-15, 15-9, 15-13 என்ற கணக்கில் சீன தைபேவின் யி சுவான் சென்/சுன் யென் சு கூட்டணியை சாய்த்தது.
கலப்பு இரட்டையரில், போட்டித்தரவரிசையில் 14-ஆம் இடத்திலிருக்கும் பாவ்யா சாப்ரா/விசாகா டோப்போ ஜோடி 12-15, 15-11, 15-12 என்ற கேம்களில், 3-ஆம் இடத்திலிருந்த பிரான்ஸின் திபால்ட் காா்டோன்/அகதே கியுவஸ் இணையை வீழ்த்தி அசத்தியது.