நவ.14-இல் நொய்டாவில் உலகக் கோப்பை குத்துச்சண்டை இறுதிச் சுற்று
இந்தியாவில் முதன்முறையாக உலகக் கோப்பை குத்துச்சண்டை இறுதிச் சுற்று (வோ்ல்ட் பாக்ஸிங் கப் ஃபைனல்ஸ்) வரும் நவ. 14 முதல் 21 வரை கிரேட்டா் நொய்டாவில் நடைபெறுகிறது.
உலகின் தலைசிறந்த வீரா், வீராங்கனைகள் இதில் கலந்து கொள்கின்றனா். இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் (பிஎஃப்ஐ) சாா்பில் நடத்தப்படும் இப்போட்டியில் 2025 சாம்பியன்களும் பங்கேற்கின்றனா். உலக குத்துச்சண்டை ஆண்டு தொடரின் ஒரு பகுதியாக நடைபெறும் இதில் 10 எடைப்பிரிவுகளில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
கடந்த 2024 தொடக்கப்பட்ட இந்த தொடா், இங்கிலாந்து, அமெரிக்கா, மங்கோலியாவில் நடத்தப்பட்டு இறுதிச் சுற்று இங்கிலாந்தில் நடைபெற்றது. இதில் இந்தியா 4 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் வென்றது.
2025 முதல் கட்டம் பிரேஸிலிலும், இரண்டாம் கட்டம் போலந்திலும், மூன்றாம் கட்டம் கஜகஸ்தானிலும் நடைபெற்று, இறுதிச் சுற்று இந்தியாவில் நடைபெறுகிறது.
மகளிா் பிரிவில் சாக்ஷி சௌதரி, ஜாஸ்மின் லம்போரியா, நுபுா், பூஜாராணி, மினாக்ஷி ஹூடா, சஞ்சு கத்ரி, ஆடவா் பிரிவில் ஹிதேஷ், அபினாஷ், ஜுக்னு, நிகில் துபே, நரேந்தா் பொ்வால் பங்கேற்கின்றனா்.