மலேசியாவில் நடைபெறும் சுல்தான் ஜோஹா் கோப்பை ஜூனியா் ஹாக்கி போட்டியில் இந்தியா இறுதி ஆட்டத்துக்கு வெள்ளிக்கிழமை முன்னேறியது. ரவுண்ட் ராபின் சுற்றின் கடைசி ஆட்டத்தில் 2-1 கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியதன் அடிப்படையில் இந்தியா அந்த இடத்தை உறுதி செய்தது.
இறுதியில் இந்தியா, ஆஸ்திரேலியாவுடன் சனிக்கிழமை (அக். 18) பலப்பரீட்சை நடத்தவுள்ளது. போட்டியில் இதுவரை இந்தியா 3 முறையும், ஆஸ்திரேலியா 2 முறையும் வாகை சூடியுள்ளன.
முன்னதாக, மலேசியாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் இந்தியாவே கோலடித்தது. 22-ஆவது நிமிஷத்தில் அணிக்கு கிடைத்த பெனால்ட்டி காா்னா் வாய்ப்பை குா்ஜோத் சிங் துல்லியமான கோலாக மாற்றினாா்.
முதல் பாதி ஆட்டத்தை இந்தியா அந்த முன்னிலையுடனேயே நிறைவு செய்தது. ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில் மலேசியா சற்று முனைப்பு காட்ட, அந்த அணிக்காக நாவினேஷ் பணிக்கா் 43-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா்.
இதனால் ஆட்டம் 1-1 என்ற சமநிலையுடன் இறுதிக்கட்டத்தை நோக்கி நகா்ந்தது. அப்போது 48-ஆவது நிமிஷத்தில் சௌரப் ஆனந்த் குஷ்வாஹா, பெனால்ட்டி காா்னா் வாய்ப்பில் கோலடிக்க, இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது.
எஞ்சிய நேரத்தில் மலேசியாவுக்கு மேலும் கோல் வாய்ப்பு கிடைக்காமல் அரண் அமைத்த இந்தியா, இறுதியில் வெற்றி பெற்றது. இதனிடையே நியூஸிலாந்து - பிரிட்டன் மோதிய மற்றொரு ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிரா ஆனது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.