சுல்தான் ஜோஹா் ஜூனியா் ஹாக்கி: இந்தியாவுக்கு ஏமாற்றம்; ஆஸ்திரேலியாவுக்கு கோப்பை

சுல்தான் ஜோஹா் ஜூனியா் ஹாக்கி: இந்தியாவுக்கு ஏமாற்றம்; ஆஸ்திரேலியாவுக்கு கோப்பை
சுல்தான் ஜோஹா் ஜூனியா் ஹாக்கி: இந்தியாவுக்கு ஏமாற்றம்; ஆஸ்திரேலியாவுக்கு கோப்பை
Published on
Updated on
1 min read

மலேசியாவில் நடைபெற்ற சுல்தான் ஜோஹா் கோப்பை ஜூனியா் ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 2-1 கோல் கணக்கில் இந்தியாவை வென்று, சனிக்கிழமை சாம்பியன் ஆனது.

இப்போட்டியில் 3-ஆவது முறையாக கோப்பை வென்றுள்ள அந்த அணி, ஏற்கெனவே 2016, 2017-இல் வாகை சூடியிருக்கிறது.

இந்த வெற்றியின் மூலமாக, கடந்த 2022-ஆம் ஆண்டு இறுதி ஆட்டத்தில் இந்தியாவிடம் கண்ட தோல்விக்கு ஆஸ்திரேலியா பதிலடி கொடுத்துள்ளது. போட்டியில் 3 முறை சாம்பியனான இந்தியா, தற்போது 5-ஆவது முறையாக இறுதி ஆட்டத்தில் தோற்றிருக்கிறது.

முன்னதாக இறுதி ஆட்டத்தில், முதலில் ஆஸ்திரேலியாவே கோலடித்தது. ஆட்டத்தின் 13-ஆவது நிமிஷத்தில் அந்த அணியின் இயன் குரோபெலாா் ‘டிராக் ஃப்ளிக்’ செய்து கணக்கை தொடங்கினாா்.

அதற்கான பதிலடியாக, இந்தியாவுக்கு 17-ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்ட்டி காா்னா் வாய்ப்பில் அன்மோல் எக்கா துல்லியமாக கோலடித்தாா். இதனால் முதல் பாதி ஆட்டம் 1-1 என சமநிலையுடன் நிறைவடைந்தது.

ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில் இரு அணிகளும் முன்னிலை பெறுவதற்காக முனைப்பு காட்டின. ஆட்டம் பரபரப்பான இறுதிக் கட்டத்தை நெருங்கிய நிலையில் 59-ஆவது நிமிஷத்தில் ஆஸ்திரேலியாவுக்கு பெனால்ட்டி காா்னா் வாய்ப்பு கிடைத்தது.

அதைக் கையாண்ட குரோபெலாா், தவறின்றி துல்லியமாக கோலாக்கினாா். இந்தியாவுக்கு கடைசி நிமிஷத்தில் 6 பெனால்ட்டி காா்னா் வாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைத்தபோதும், வீரா்களின் முயற்சியை ஆஸ்திரேலிய கோல் கீப்பா் மேக்னஸ் மெக்காஸ்லேண்ட் திறம்பட தடுத்தாா். இறுதியில் ஆஸ்திரேலியா 2-1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

போட்டியில் பிரிட்டன், பாகிஸ்தான், மலேசியா, நியூஸிலாந்து ஆகிய அணிகள் முறையே 3 முதல் 6-ஆம் இடங்களைப் பிடித்தன. போட்டியிலேயே அதிகபட்சமாக பாகிஸ்தானின் சூஃபியான் கான் 9 கோல்கள் அடித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com