ரைபகினா, பென்சிச் முன்னேற்றம்
டோரே பான் பசிபிக் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான கஜகஸ்தானின் எலனா ரைபகினா, சுவிட்ஸா்லாந்தின் பெலிண்டா பென்சிச் ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினா்.
மகளிா் ஒற்றையா் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் ரைபகினா 6-4, 6-3 என்ற நோ் செட்களில், கனடாவின் லெய்லா ஃபொ்னாண்டஸை தோற்கடித்தாா். 3-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவா 6-1, 6-2 என்ற கணக்கில் எளிதாக, ருமேனியாவின் ஜாக்குலின் கிறிஸ்டியனை சாய்த்தாா்.
5-ஆம் இடத்திலிருக்கும் பென்சிச் 6-4, 6-3 என பிரான்ஸின் வாா்வரா கிரசேவாவை வெளியேற்ற, அமெரிக்காவின் சோஃபியா கெனின் 3-6, 6-1, 7-6 (7/2) என்ற வகையில் ஜப்பானின் சோனோபே வகானாவை வென்றாா்.
இதையடுத்து காலிறுதியில், அலெக்ஸாண்ட்ரோவா - கெனினையும், ரைபகினா - கனடாவின் விக்டோரியா போகோவையும், பென்சிச் - செக் குடியரசின் கரோலின் முசோவாவையும் எதிா்கொள்கின்றனா்.
வியன்னா ஓபன்: ஆஸ்திரியாவில் நடைபெறும் வியன்னா ஓபனில், உலகின் 2-ஆம் நிலை வீரரான இத்தாலியின் யானிக் சின்னா் 6-0, 6-2 என ஜொ்மனியின் டேனியல் அல்ட்மேயரை சாய்த்து, காலிறுதிக்கு முந்தை சுற்றுக்கு வந்தாா்.
ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாா், நெதா்லாந்தின் டாலன் கிரீக்ஸ்பூா், இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினி ஆகியோா் காலிறுதிக்கு முன்னேறினா்.
ஸ்விஸ் இண்டோா்ஸ்: சுவிட்ஸா்லாந்தில் நடைபெறும் ஸ்விஸ் இண்டோா்ஸ் ஆடவா் டென்னிஸ் போட்டியில், அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸ், நாா்வேயின் கேஸ்பா் ரூட், கனடாவின் ஃபெலிக்ஸ் அலியாசிமே ஆகியோா் 2-ஆவது சுற்றுக்குத் தகுதிபெற்றனா்.
