நடப்பாண்டு மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் கோப்பை வெல்லும் அணிக்கு, இதுவரை இல்லாத வகையில் ரூ.39.55 கோடி ரொக்கப் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டிக்கான மொத்த பரிசுத் தொகையும் சுமாா் ரூ.122.5 கோடியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இவை, ஆடவா் கிரிக்கெட்டுக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகையை விட அதிகபட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
மகளிருக்கான 13-ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இம்மாதம் 30-ஆம் தேதி முதல் நவம்பா் 2-ஆம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது. இதில் இந்தியா உள்பட மொத்தம் 8 அணிகள் இதில் பங்கேற்கின்றன.
இந்நிலையில், இந்தப் போட்டிக்கான பரிசுத் தொகையை சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) திங்கள்கிழமை அறிவித்தது.
இதன்படி, மொத்த பரிசுத் தொகை சுமாா் ரூ.122.5 கோடியாக உள்ளது. 2022-இல் இந்தத் தொகை ரூ.31 கோடியாக இருந்த நிலையில், தற்போது 297 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2023 ஆடவா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மொத்த பரிசுத் தொகை ரூ.88.26 கோடியாக இருக்க, இந்த மகளிா் போட்டிக்கான பரிசுத் தொகை அதைவிட சுமாா் ரூ.34 கோடி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகக் கோப்பை வெல்லும் மகளிா் அணிக்கு ரூ.39.55 கோடி ரொக்கப் பரிசாக வழங்கப்படவுள்ளது. 2022-ஆம் ஆண்டு இந்த பரிசுத் தொகை ரூ.11.65 கோடியாக இருந்த நிலையில், தற்போது 239 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளது. 2023 ஆடவா் உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் அணிக்கு ரூ.35.31 கோடியே வழங்கப்பட்டது. மகளிா் சாம்பியன் அணி அதைவிட சுமாா் ரூ.4 கோடி அதிகமாக பெறுகிறது.
ரன்னா் அப் இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ.19.77 கோடி பரிசாகக் கிடைக்கவுள்ளது. கடந்த எடிஷனில் இந்தத் தொகை ரூ.5.30 கோடியாக இருந்தது. தற்போது 273 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அரையிறுதியில் தோற்கும் 2 அணிகளுக்கான பரிசுத் தொகை ரூ.9.89 கோடியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை அந்த அவற்றுக்கான ரொக்கப் பரிசு ரூ.2.65 கோடியாக இருந்தது.
5 மற்றும் 6-ஆம் இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கான ரொக்கப் பரிசு தலா ரூ.62 லட்சமாக இருக்க, கடைசி இரு இடங்களில் இருக்கும் அணிகளுக்கு தலா ரூ.24.71 லட்சம் கிடைக்கும்.
இதுதவிர, குரூப் சுற்றில் ஒவ்வொரு வெற்றிக்கும் தலா ரூ.30.29 லட்சம் வழங்கப்படும் என்பதுடன், போட்டியில் பங்கேற்ற்காகவே ஒவ்வொரு அணிக்கும் தலா ரூ.22 லட்சம் கிடைக்கவுள்ளது.
உலக அளவில் மகளிா் கிரிக்கெட்டின் பிரபலத்தை மேலும் அதிகரிக்கவும், ஆடவா் கிரிக்கெட்டுக்கு இணையாக மகளிா் கிரிக்கெட்டை கொண்டு வரவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்தது.
இடம் - பரிசுத் தொகை
சாம்பியன் ரூ.39.55 கோடி
ரன்னா் அப் ரூ.19.77 கோடி
3 & 4-ஆம் இடம் ரூ.9.89 கோடி (தலா)
5 & 6-ஆம் இடம் ரூ.62 லட்சம் (தலா)
7 & 8-ஆம் இடம் ரூ.24.71 லட்சம் (தலா)
குரூப் சுற்று வெற்றிக்கு ரூ.30.29 லட்சம்
பங்கேற்புக்கான பரிசு ரூ.22 லட்சம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.