
புரோ கபடி லீக்கின் புதிய விதிமுறைகள் சுவாரசியமாக இருப்பதாக தமிழ் தலைவாஸ் கேப்டன் பவன் ஷெராவத் பேசியுள்ளார்.
12-வது புரோ கபடி லீக் தொடர் ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி தொடங்கியது .
முதற்கட்ட லீக் ஆட்டங்கள் செப்டம்பர் 11-ந் தேதி வரை விசாகப்பட்டினத்திலும், அடுத்த கட்ட ஆட்டங்கள் முறையே ஜெய்ப்பூர் (செப்.12-27), சென்னை (செப்.29- அக்.10), தில்லி (அக்.11-23) ஆகிய நகரங்களிலும் நடைபெறவுள்ளன.
இந்தத் தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி கே.சி., குஜராத் ஜெயண்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் யுபி யோதாஸ் ஆகிய 12 அணிகள் பங்கேற்றுள்ளன.
இந்த நிலையில், இந்த சீசனில் முதல் ஆட்டத்தில் வெற்றியுடன் தொடங்கிய தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் பவன் ஷெராவத், ஜியோ ஸ்டார் நடத்திய மீடியா டே நிகழ்வில் பேசினார்.
டை-பிரேக்கர்
அப்போது அவர் பேசுகையில், “டை-பிரேக்கர் விதி மிகவும் சுவாரஸ்யமானதும், விளையாட்டுக்கு ஆர்வம் சேர்க்கும் வகையிலும் இருக்கிறது. மேலும், நமது திறமை என்ன என்பதைக் காட்டவும் முடியும். இந்த டை-பிரேக்கர் விதியில் நம்முடைய அணியில் ஐந்து வீரர்கள் இருந்தாலும், நமது அணிக்கு சாதகமாக இருக்கிறது.
‘டூ-ஆர்-டை’
இந்த விதியால் போட்டியின் முடிவுகள் சமனில் அல்லாமல் ‘டூ-ஆர்-டை’ நிலையை அடைகிறது. (‘டூ-அர்-டை’ என்பது தொடர்ந்து 2 empty 2 ரெய்டுகளுக்கு அடுத்துவருவது..)
இது புரோ கபடி லீக்கிற்கு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். இந்த விதியை ரசிகர்களும் எளிமையாக புரிந்துகொள்கின்றனர்.
வீரர்கள் தேர்வு மற்றும் வியூகம்
வெறும் காகிதத்தில் பார்க்கும்போது ஒருவரும் முக்கிய ரெய்டராக தெரியமாட்டார்கள். ஆனால், கேப்டனாகவும் மூத்த வீரராகவும், எந்த வீரர் எந்த நிலையில் சிறப்பாக விளையாடுவார் என்பதை நான் கவனிக்க வேண்டும்.
உதாரணமாக, அர்ஜுன் தேஷ்வால் டிஃபென்ஸுக்கு எதிராக அதிக புள்ளிகள் எடுக்க முடியும் என்று நான் நினைத்தால், அவரை அனுப்புவது கேப்டனாக என்னுடைய கடமை.
ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு பங்கு உள்ளது, மேலும் அர்ஜுன் தனது பங்கினை சிறப்பாக செய்கிறார். அணியின் தேவைக்கு ஏற்ப செயல் படுத்துவதே முக்கியம்.
நடப்பு சீசனுக்கான சிறப்பு ஏற்பாடுகள்
ஒவ்வொரு சீசனிலும் தானாகவே மாற்றங்கள் நிகழும். பெரிய மாற்றங்கள் தேவையில்லை. உங்கள் திறன்களை மேம்படுத்தி, உங்களுக்கு கொடுக்கப்பட்ட கடமையை நிறைவேற்ற வேண்டும்.
தற்போது, நான் எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை 100 சதவிகிதம் செய்கிறேன். புதிய வீரர்களுடன் பயிற்சி செய்வதால், நீங்கள் புதிய திறன்களை கற்றுக் கொள்கிறீர்கள்.
மற்ற அணிகள் எப்படி?
ஒவ்வொரு அணியும் மற்ற அணியைப் போன்றே இருக்கிறது. ஒவ்வொரு போட்டியும் சவாலானதுதான். எந்த ஒரு அணி மட்டும் பலமாக உள்ளது என்று இல்லை; எல்லா அணிகளும் சிறப்பாக விளையாடுகின்றன.
நாங்கள் அதற்கேற்றாற்போல் திட்டமிட்டு விளையாடுவோம். அவர்களின் பலவீனங்களைக் கண்டறிந்து, அதை விவாதித்து, பிறகு அதனை போட்டியின்போது செயல்படுத்துவோம்” எனத் தெரிவித்தார் பவன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.