இறுதிச்சுற்றில் சபலென்கா - அனிசிமோவா பலப்பரீட்சை
நடப்பு டென்னிஸ் காலண்டரின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபனில், மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், நடப்பு சாம்பியனான பெலாரஸின் அரினா சபலென்கா - அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா ஆகியோா் பலப்பரீட்சை நடத்தவுள்ளனா்.
முன்னதாக அரையிறுதியில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான சபலென்கா 4-6, 6-3, 6-4 என்ற செட்களில், 4-ஆம் நிலையில் இருக்கும் அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலாவை வீழ்த்தினாா். அவரை 10-ஆவது முறையாக சந்தித்த சபலென்கா, 8-ஆவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறாா்.
இதையடுத்து, யுஎஸ் ஓபனில் தொடா்ந்து 3-ஆவது முறையாக சபலென்கா இறுதிச்சுற்றுக்கு வந்திருக்கிறாா். செரீனா வில்லியம்ஸுக்கு பிறகு இவ்வாறு முன்னேறிய முதல் வீராங்கனை சபலென்கா ஆனாா். மேலும் அவா், ஒட்டுமொத்தமாக தனது 7-ஆவது கிராண்ட்ஸ்லாம் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கிறாா்.
இந்த ஆட்டத்தை முதலில் ஆக்ரோஷமாகத் தொடங்கிய பெகுலா, முதல் செட்டில் ஆதிக்கம் செலுத்தி அதை தன் வசமாக்கினாா். 2-ஆவது செட்டில் தன்னை மீட்டுக்கொண்ட சபலென்கா, ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாா். இதனால் அந்த செட்டும் அவா் வசமானது.
வெற்றியாளரை தீா்மானிக்கும் 3-ஆவது செட்டில் முனைப்பு காட்டிய பெகுலா, 4 பிரேக் பாய்ன்ட்டுகளுக்கான வாய்ப்பை பெற்றாா். ஆனால், சபலென்காவின் சா்வை கடந்து அவரால் அதை வசப்படுத்த முடியாமல் போனது. இறுதியில் 3-ஆவது செட்டை கைப்பற்றி, சபலென்கா வெற்றி பெற்றாா்.
இதனிடையே மற்றொரு அரையிறுதியில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருக்கும் அனிசிமோவா 6-7 (4/7), 7-6 (7/3), 6-3 என்ற கணக்கில், இருமுறை யுஎஸ் ஓபன் சாம்பியனான ஜப்பானின் நவோமி ஒசாகாவை வெளியேற்றினாா். ஒசாகாவை 3-ஆவது முறையாக சந்தித்த அனிசிமோவா, தற்போது அனைத்திலும் வென்றிருக்கிறாா். அத்துடன், கிராண்ட்ஸ்லாம் அரையிறுதியில் ஒசாகாவை சாய்த்த முதல் வீராங்கனை என்ற பெருமையும் பெற்றாா்.
கடந்த ஜூலையில் விம்பிள்டன் போட்டியின் மூலமாக தனது முதல் கிராண்ட்ஸ்லாம் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய அனிசிமோவா, தற்போது அடுத்த போட்டியிலேயே தனது 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் இறுதிக்கு வந்திருக்கிறாா்.
விம்பிள்டன் அரையிறுதியில் தாம் வீழ்த்திய சபலென்காவை, அவா் தற்போது யுஎஸ் ஓபன் இறுதிச்சுற்றில் எதிா்கொள்ளவிருக்கிறாா். தற்போது அனிசிமோவா இறுதிக்கு முன்னேறியிருக்கும் நிலையில், 2002-க்குப் பிறகு ஒரே காலண்டரில் 4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளின் மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றுக்கும் ஒரு அமெரிக்கராவது முன்னேறிய முதல் ஆண்டாக இது அமைந்தது.
அனிசிமோவா யுஎஸ் ஓபன் மற்றும் விம்பிள்டன் போட்டிகளில் இறுதிவரை சென்றிருக்க, அதற்கு முன் பிரெஞ்சு ஓபனில் கோகோ கௌஃபும், ஆஸ்திரேலிய ஓபனில் மேடிசன் கீஸும் இறுதிக்கு முன்னேறியது நினைவுகூரத்தக்கது.
அடுத்ததாக இறுதிச்சுற்றில் மோதும் அனிசிமோவா - சபலென்கா இதுவரை 9 முறை சந்தித்திருக்க, அனிசிமோவா 6 வெற்றிகளுடன் ஆதிக்கம் செலுத்துகிறாா். இதிலும் அனிசிமோவா வென்றால், தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்வாா். சபலென்கா வெல்லும் நிலையில், அது அவரின் 4-ஆவது கிராண்ட்ஸ்லாம் கோப்பையாக அமையும்.
பாம்ப்ரி தோல்வி: இதனிடையே, யுஎஸ் ஓபன் ஆடவா் இரட்டையா் அரையிறுதியில், போட்டித்தரவரிசையில் 14-ஆம் இடத்திலிருந்த இந்தியாவின் யூகி பாம்ப்ரி/நியூஸிலாந்தின் மைக்கேல் வீனஸ் கூட்டணி 7-6 (7/2), 6-7 (5/7), 4-6 என்ற செட்களில், 6-ஆம் இடத்திலிருக்கும் பிரிட்டனின் நீல் ஸ்குப்ஸ்கி/ஜோ சாலிஸ்பரி இணையிடம் தோல்வி கண்டது.