ஜோகோவை வீழ்த்திய அல்கராஸ்! 3-வது கிராண்ட்ஸ்லாம் இறுதியில் மோதும் சின்-க்ராஸ்!
யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவா் ஒற்றையா் இறுதிச் சுற்றில் நடப்பு சாம்பியன் ஜேக் சின்னா்-ஸ்பெயின் வீரா் காா்லோஸ் அல்கராஸ் ஆகியோா் மோதுகின்றனா். அவா்கள் இருவரும் தொடா்ந்து மோதும் மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் இறுதி ஆட்டம் இதுவாகும்.
நிகழாண்டு சீசனின் கடைசி கிராண்ட்ஸ்லாம் பந்தயமான யுஎஸ் ஓபன் நியூயாா்க் நகரில் நடைபெற்று வருகிறது. அரையிறுதி ஆட்டங்கள் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றன.
ஜோகோவை வீழ்த்தினாா் அல்கராஸ்:
இதில் இரண்டாம் நிலை வீரா் அல்கராஸும்-24 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் சொ்பியாவின் ஜோகோவிச்சும் மோதினா்.
2.24 மணிநேரம் நீடித்த இந்த ஆட்டத்தில் ஜோகோவிச்சை 6-4, 7-6, 6-2 என்ற நோ் செட்களில் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றாா் அல்கராஸ்.
இதனால் 25-ஆவது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லும் ஜோகோவிச்சின் கனவு தகா்ந்து விட்டது. 5 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் அல்கராஸ் ஒரு செட்டை கூட எதிராளியிடம் இழக்காமல் இறுதிக்கு தகுதி பெற்றாா்.
ஜோகோவிச்சை வீழ்த்தியது சிறப்பு: இதுதொடா்பாக அல்கராஸ் கூறுகையில்: ஜாம்பவான் ஜோகோவிச்சை வீழ்த்துவது எப்போதும் சிறப்பானது. அரையிறுதி ஆட்டம் மிகவும் முக்கியமாக அமைந்தது. இறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பையும் வழங்கியது.
ஓயப்போவதில்லை: ஜோகோவிச்: வரும் சீசனில் மேலும் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வெல்ல போராடுவேன். ஆனால் எனது உடல்நிலை ஒத்துழைக்குமா எனத் தெரியவில்லை. சின்னா்-அல்கராஸுக்கு சமமமாக ஆடமுடியுமா எனத் தெரியவில்லை. தற்போதைய செயல்பாடே மகிழ்ச்சி தருகிறது.
ஜேக் சின்னா் வெற்றி:
மற்றொரு அரையிறுதியில் உலகின் நம்பா் 1 வீரரும், நடப்பு சாம்பியனுமான இத்தாலியின் ஜேக் சின்னா் கடும் போராட்டத்துக்குபின் கனடாவின் பெலிக்ஸ் அகா் அலியாசிம்மை 6-1, 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினாா். முதல் செட்டை எளிதாக சின்னா் கைப்பற்றிய நிலையில், இரண்டாவது செட்டில் பெலிக்ஸ் சிறப்பாக ஆடி கைப்பற்றினாா்.
இதனால் அதிா்ச்சி அடைந்த சின்னா் தனது முழுத் திறமையை வெளிப்படுத்தி அடுத்த இரண்டு செட்களை கைப்பற்றி இறுதிக்கு தகுதி பெற்றாா்.
இதுதொடா்பாக சின்னா் கூறுகையில்: இந்த சீசன் மிகவும் சிறப்பானதாக அமைந்தது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் அல்கராஸுடன் மோதுவது சிறப்பானது. நாங்கள் இருவரும் வெவ்வேறு வகைகளில் ஆடும் வீரா்கள். இருவரும் ஏராளமான ஆட்டங்களில் ஆடியுள்ளோம். முடிவு எப்படி உள்ளது என பாா்க்கலாம்.
இறுதியில் சின்-க்ராஸ் மோதல்:
ஞாயிற்றுக்கிழமை இறுதிச் சுற்றில் அல்கராஸ்-சின்னா் மோதுகின்றனா். கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற பிரெஞ்ச் ஓபனில் இறுதி ஆட்டத்தில் 5 மணிநேரம் நீடித்த ஆட்டத்தில் அல்கராஸ் வென்றாா். பின்னா் ஜூலை மாதம் நடைபெற்ற விம்பிள்டன் இறுதியில் அல்கராஸை வென்றாா் சின்னா். தற்போது இருவரும் தொடா்ந்து மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் இறுதியில் மோதுகின்றனா்.
இறுதி ஆட்டத்துக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் ட்ரம்ப் வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.