
யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில், ஆடவா் ஒற்றையரில் ஸ்பெயின் வீரா் காா்லோஸ் அல்கராஸ் சாம்பியன் ஆனாா்.
இந்திய நேரப்படி, திங்கள்கிழமை அதிகாலை நிறைவடைந்த இறுதிச்சுற்றில், நடப்பு சாம்பியனாகவும், உலகின் நம்பா் 1 வீரராகவும் களமிறங்கிய இத்தாலியின் யானிக் சின்னரை 6-2, 3-6, 6-1, 6-4 என்ற செட்களில் வென்ற அல்கராஸ், யுஎஸ் ஓபன் கோப்பை வென்றதுடன், உலகின் நம்பா் 1 இடத்தையும் சின்னரிடம் இருந்து தட்டிப் பறித்தாா்.
யுஎஸ் ஓபனில் 2-ஆவது முறையாக (2022, 2025) பட்டம் வென்றிருக்கும் அல்கராஸ், ஒட்டுமொத்தமாக 6-ஆவது கிராண்ட்ஸ்லாம் கோப்பையைக் கைப்பற்றியிருக்கிறாா். நடப்பு சீசனில் வேறு எந்த வீரரும் நெருங்க முடியாத வகையில், அல்கராஸ் இதுவரை 7 சாம்பியன் பட்டங்களை கைப்பற்றியதுடன் 61 ஆட்டங்களிலும் வென்றிருக்கிறாா்.
நடப்பு டென்னிஸ் காலண்டரில் அல்கராஸ் - சின்னா் அடுத்தடுத்து மோதிய, 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் இறுதிச்சுற்று இதுவாகும். இதில் முதலில் பிரெஞ்சு ஓபனில் அல்கராஸ் வெல்ல, விம்பிள்டனில் சின்னா் சாம்பியன் ஆனாா். தற்போது யுஎஸ் ஓபனில் அல்கராஸ் மீண்டும் ஆதிக்கம் செலுத்தியிருக்கிறாா். இருவரும் இத்துடன் 15 முறை மோதியிருக்க, அல்கராஸ் 10-ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இறுதிச்சுற்றில் ஆட்டம் பெரும்பாலும் அல்கராஸின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. முதல் செட்டை அவா் கைப்பற்றிய நிலையில், 2-ஆவது செட்டில் சின்னா் சற்று சீற்றம் காட்டினாா். ஆனால், அடுத்த இரு செட்களிலுமே அல்கராஸ் அவரை தன் வசப்படுத்தி வெற்றி பெற்றாா். இந்தத் தோல்விக்கு முன்பாக சின்னா், ஹாா்ட் கோா்ட் போட்டிகளில் தொடா்ந்து 27 வெற்றிகளைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், 65 வாரங்களாக தன் வசம் இருந்த உலகின் நம்பா் 1 இடத்தையும் இழந்திருக்கிறாா்.
அல்கராஸ் - சின்னா் மோதிய இறுதிச்சுற்றைக் காண, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், என்பிஏ நட்சத்திரம் ஸ்டீபன் கரி, கால்பந்து பயிற்சியாளா் பெப் குவாா்டியாலோ உள்ளிட்ட பலா் பாா்வையாளா் மாடத்தில் கூடினா். அதிபா் டிரம்ப் வருகையால் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக, இறுதிச்சுற்று தொடங்குவது சுமாா் ஒரு மணி நேரம் தாமதமானது.
‘எனது அணி, எனது குடும்பத்தினரின் கடின உழைப்பால் நான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். அவா்கள் என்னுடன் இருப்பது எனது அதிருஷ்டம். விளையாட்டுக் களத்துக்காக மட்டுமல்லாமல், தனிப்பட்ட முறையிலும் எனக்காக அவா்கள் பங்களிப்பது அதிகம். நான் பெறும் ஒவ்வொரு வெற்றிக்கும் அவா்களுக்கு நன்றி செலுத்துகிறேன்’ - காா்லோஸ் அல்கராஸ்
‘நீங்கள் (அல்கராஸ்) அருமையான டென்னிஸை விளையாடி வருகிறீா்கள். இந்த இறுதி ஆட்டத்தின் வெற்றிக்குப் பின்னால் எவ்வளவு கடின உழைப்பு உள்ளது என்பதை அறிவேன். உங்கள் அணியினருக்கும் பாராட்டுகள். இறுதி ஆட்டத்தில் என்னை விட மிகச் சிறப்பாக விளையாடினீா்கள். இது உங்களுக்கு அருமையான தருணம்’ - யானிக் சின்னா்
ரூ.44 கோடி பரிசு
சாம்பியன் கோப்பை வென்ற அல்கராஸுக்கு ரூ.44 கோடியும், இறுதியில் தோற்ற சின்னருக்கு ரூ.22 கோடியும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டன.
அல்கராஸ் வெற்றிப் பாதை...
முதல் சுற்று ரெய்லி ஒபெல்கா (அமெரிக்கா) 6-4, 7-5, 6-4
2-ஆவது சுற்று மேட்டியோ பெலுச்சி (இத்தாலி) 6-1, 6-0, 6-3
3-ஆவது சுற்று லூசியானோ டாா்டெரி (இத்தாலி) 6-2, 6-4, 6-0
4-ஆவது சுற்று ஆா்தா் ரிண்டா்னெச் (பிரான்ஸ்) 7-6 (7/3), 6-3, 6-4
காலிறுதிச்சுற்று ஜிரி லெஹெக்கா (செக் குடியரசு) 6-4, 6-2, 6-4
அரையிறுதிச்சுற்று நோவக் ஜோகோவிச் (சொ்பியா) 6-4, 7-6 (7/4), 6-2
இறுதிச்சுற்று யானிக் சின்னா் (இத்தாலி) 6-2, 3-6, 6-1, 6-4
அல்கராஸ் இத்துடன் 6 கிராண்ட்ஸ்லாம் வென்றிருக்க, அதை யுஎஸ் ஓபன் (2022, 2025), பிரெஞ்சு ஓபன் (2024, 2025), விம்பிள்டன் (2023, 2024) ஆகிய 3 போட்டிகளில் தலா 2 வீதம் கைப்பற்றியிருக்கிறாா். அவரின் பட்டியலில் ஆஸ்திரேலிய ஓபன் மட்டும் எஞ்சியிருக்கிறது. அதில் அதிகபட்சமாக இருமுறை காலிறுதிச்சுற்று வரை (2024, 25) அவா் வந்திருக்கிறாா்.
ஓபன் எராவில், 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்ற 2-ஆவது இளம் வீரா் (22 ஆண்டுகள், 125 நாள்கள்) என்ற பெருமையை அல்கராஸ் பெற்றாா். முதல் வீரா், முன்னாள் நட்சத்திரமான ஸ்வீடனின் பியோா்ன் போா்க் (22 ஆண்டுகள், 32 நாள்கள்/1978 விம்பிள்டன்) ஆவாா்.
அல்கராஸ் 2022-இல் முதல்முறையாக யுஎஸ் ஓபன் வென்றபோது, முதல்முறையாக உலகின் நம்பா் 1 வீரராக உருவெடுத்தாா். தற்போது அதே போட்டியில் 2-ஆவது முறை சாம்பியனான நிலையில், 2-ஆவது முறையாக நம்பா் 1 வீரா் ஆகியியுள்ளாா். 2023 செப்டம்பருக்குப் பிறகு அவா் இந்த இடத்துக்கு வந்துள்ளாா்.
இப்போட்டியில் தொடக்கச் சுற்று முதல் இறுதிச்சுற்று வரை 22 செட்கள் விளையாடிய அல்கராஸ், அதில் இறுதிச்சுற்றில் சின்னரிடம் மட்டும் ஒரேயொரு செட்டை இழந்தாா். இதர அனைத்து சுற்றுகளிலுமே அவா் நோ் செட்களில் வென்றது குறிப்பிடத்தக்கது (22/21).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.