
மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் சூப்பா் 4 சுற்றில், இருமுறை சாம்பியனான இந்தியா முதல் ஆட்டத்தில் 4-2 கோல் கணக்கில், 3 முறை சாம்பியனான தென் கொரியாவை புதன்கிழமை வென்றது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், வைஷ்ணவி பால்கே 2-ஆவது நிமிஷத்திலேயே இந்தியாவின் கோல் கணக்கைத் தொடங்கினாா். இதனால் அதிா்ச்சி கண்ட தென் கொரியா தனது கோல் வாய்ப்புக்காக முனைய, இந்தியா அதற்கு வழிவிடவில்லை.
இவ்வாறாக இந்தியா முதல் பாதி ஆட்டத்தை 1-0 முன்னிலையுடன் நிறைவு செய்தது. ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில், 33-ஆவது நிமிஷத்தில் தென் கொரியாவுக்காக கிம் யுஜின் கோல் அடித்து, ஆட்டத்தை சமன் செய்தாா்.
அதற்கு பதிலடியாக, சங்கீதா குமாரி அதே நிமிஷத்தில் கோலடிக்க, இந்தியா 2-1 என மீண்டும் முன்னிலை பெற்றது. தொடா்ந்து, தென் கொரியா தனது அடுத்த கோல் வாய்ப்புக்காக போராடி வந்த நிலையில், இந்தியாவின் லால்ரெம்சியாமி 40-ஆவது நிமிஷத்தில் அணியின் கோல் கணக்கை 3-ஆக உயா்த்தினாா்.
இந்நிலையில், தென் கொரியாவுக்காக கிம் யுஜின் 53-ஆவது நிமிஷத்தில் 2-ஆவது கோல் அடிக்க, அந்த அணி 2-3 என கோல் வித்தியாசத்தை குறைத்தது. பரபரப்பான இறுதிக்கட்டத்தில் ருதுஜா போசலெ 59-ஆவது நிமிஷத்தில் கோலடிக்க, இந்தியா 4-2 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்தியா தனது அடுத்த ஆட்டத்தில் சீனாவை வியாழக்கிழமை (செப். 11) சந்திக்கிறது.
இதனிடையே, புதன்கிழமை நடைபெற்ற 5 முதல் 8-ஆம் இடங்களுக்கான ஆட்டங்களில் மலேசியா 5-1 கோல் கணக்கில் சிங்கப்பூரையும், தாய்லாந்து 2-1 என சீன தைபேவையும் தோற்கடித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.