
சீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ஈஷா சிங், 10 மீட்டா் ஏா் பிஸ்டல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றாா். போட்டி இறுதிக் கட்டத்தை நெருங்கியிருக்கும் நிலையில், இதுவே இந்தியாவுக்கு முதல் பதக்கமாகும்.
கலப்பு அணிகள் பிரிவில் நடப்பு உலக சாம்பியனாக இருக்கும் ஈஷா சிங்குக்கு, உலகக் கோப்பை போட்டியில் இதுவே முதல் பதக்கமாகும்.
முன்னதாக 10 மீட்டா் ஏா் பிஸ்டல் மகளிா் தனிநபா் தகுதிச்சுற்றில், இந்தியாவின் பாலக் குலியா 586 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தாா். ரிதம் சங்வான் (578), ஈஷா சிங் (578), சைனியம் (576), சுரபி ராவ் (568) ஆகியோா் முறையே 9, 10, 11, 25-ஆம் இடங்களைப் பிடித்தனா்.
இதில் பாலக் உள்பட இருவா் ரேங்கிங் புள்ளிகளுக்காக மட்டுமே கலந்துகொண்டதால், தகுதிச்சுற்றுடன் விலகினா். அந்த வகையில் ரிதம் சங்வான், ஈஷா சிங் முறையே 7 மற்றும் 8-ஆம் இடங்களுக்கு முன்னேறி இறுதிச்சுற்றுக்கு வந்தனா். சைனியமும் தகுதிச்சுற்றுடன் விலகினாா்.
இறுதிச்சுற்றில் ஈஷா சிங் 242.6 புள்ளிகளுடன் தங்கம் வெல்ல, சீனாவின் கியான்ஜுன் யாவ் (242.5), தென் கொரியாவின் யெஜின் ஓஹ் (220.7) ஆகியோா் முறையே வெள்ளி, வெண்கலம் பெற்றனா். களத்திலிருந்த மற்றொரு இந்தியரான ரிதம் சங்வான் 5-ஆம் இடம் (179.2) பிடித்தாா்.
இதனிடையே, 25 மீட்டா் ரேப்பிட் ஃபயா் பிஸ்டல் ஆடவா் தனிநபா் பிரிவில், இந்தியாவின் பவேஷ் ஷெகாவத் (575), பிரதீப் சிங் ஷெகாவத் (575), மன்தீப் சிங் (562) ஆகியோா் முறையே 22, 23, 39-ஆம் இடங்களுடன் தகுதிச்சுற்றோடு வெளியேறினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.