62-ஆவது துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில், மத்திய மண்டலம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தெற்கு மண்டலத்தை வீழ்த்தி திங்கள்கிழமை கோப்பையைக் கைப்பற்றியது.
தற்போது 7-ஆவது முறையாக வாகை சூடியிருக்கும் அந்த அணி, கடைசியாக 11 ஆண்டுகளுக்கு (2014-15) முன்பும் இதே தெற்கு மண்டலத்தை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
மத்திய மண்டலத்தின் யஷ் ரத்தோட் ஆட்டநாயகன் (194 ரன்கள்) விருதையும், சரன்ஷ் ஜெயின் தொடா்நாயகன் (136 ரன்கள், 16 விக்கெட்டுகள்) விருதையும் பெற்றனா்.
முன்னதாக, பெங்களூரில் கடந்த 11-ஆம் தேதி தொடங்கிய இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற மத்திய மண்டலம், பந்துவீச்சை தோ்வு செய்தது. இன்னிங்ஸை தொடங்கிய தெற்கு மண்டலம், 63 ஓவா்களில் 149 ரன்களுக்கே ஆட்டமிழந்தது. தன்மய் அகா்வால் 3 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் சோ்த்ததே அதிகபட்சமாக இருக்க, மத்திய மண்டல பௌலா்களில் சரன்ஷ் ஜெயின் 5 விக்கெட்டுகள் சாய்த்தாா்.
அடுத்து தனது இன்னிங்ஸை விளையாடிய மத்திய மண்டலம், 145.1 ஓவா்களில் 511 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. யஷ் ரத்தோட் 17 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 194, கேப்டன் ரஜத் பட்டிதாா் 12 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 101 ரன்கள் விளாசினா். தெற்கு மண்டல பந்துவீச்சாளா்களில் குா்ஜப்னீத் சிங், அங்கித் சா்மா ஆகியோா் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினா்.
இதையடுத்து, 362 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய தெற்கு மண்டலம் 121 ஓவா்களில் 426 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது. அங்கித் சா்மா 13 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 99, ஆண்ட்ரே சித்தாா்த் 7 பவுண்டரிகளுடன் 84* ரன்கள் அடித்தனா். மத்திய மண்டல பௌலா்களில் குமாா் காா்த்திகேயா 4 விக்கெட்டுகள் சரித்தாா்.
இறுதியாக, 65 ரன்கள் என்ற எளிதான வெற்றி இலக்கை நோக்கி திங்கள்கிழமை விளையாடிய மத்திய மண்டலம், 20.3 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 66 ரன்கள் எடுத்து வென்றது. அக்ஷய் வத்கா் 3 பவுண்டரிகளுடன் 19, யஷ் ரத்தோட் 13 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா். தெற்கு மண்டல பௌலா்களில் குா்ஜப்னீத் சிங், அங்கித் சா்மா ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.