
பிரதமர் மோடிக்கு மெஸ்ஸியின் உலகக் கோப்பை வென்ற ஜெர்ஸியை பரிசாகக் கொண்டுவர காரணமாக இருந்தவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார்.
கொல்கத்தாவைச் சேர்ந்த சதத்ரு தத்தா எனும் விளையாடுக்கான விளம்பரதாரர்தான் இந்த முன்னெடுப்பைச் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் நரேந்திர மோடியின் 75-ஆவது பிறந்த நாளுக்காக உலகக் கோப்பை போட்டியின்போது மெஸ்ஸி பயன்படுத்திய ஜெர்ஸியில் அவரது கையெழுத்துப் பெற்று பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து சதத்ரு தத்தா பேசியதாவது:
கடந்த பிப்ரவரியில் மெஸ்ஸியைச் சந்தித்தேன். 45 நிமிஷங்கள் நடைபெற்ற அந்தச் சந்திப்பின்போதே அவரிடம் செப்டம்பரில் மோடியின் 75-ஆவது பிறந்த நாள் வருகிறதெனக் கூறினேன். அதற்கு மெஸ்ஸி தனது ஜெர்ஸியில் கையெழுத்திட்டு அனுப்பவதாகக் கூறினார்.
இந்த ஜெர்ஸி இன்னும் 2, 3 நாள்களில் பிரதமரிடம் ஒப்படைக்கப்படும்.
இந்தியா வரும்போது பிரதமருடன் அவரது வீட்டில் பேசுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
டிசம்பர் 13ஆம் தேதி இந்தியாவுக்கு வரும் மெஸ்ஸி பிரதமரைச் சந்தித்த பின்பு, கொல்கத்தா, மும்பை, தில்லியை சுற்றுப் பயணம் செய்கிறார்.
கொல்கத்தாவில் அவரது சிலையை திறந்து வைத்து, பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருக்கிறார்.
2011க்குப் பிறகு, வரும் நவம்பரில் இந்தியா வரும் மெஸ்ஸி கேரளத்தில் நட்பு ரீதியான போட்டியில் விளையாடுவார் என கேரள அமைச்சர் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக ஆர்ஜென்டீன அணி தனது நட்பு ரீதியான போட்டிகள் பட்டியலை வெளியிட்டது. அதில் கேரளாவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.