ஆப்கனை வெளியேற்றியது இலங்கை
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 11-ஆவது ஆட்டத்தில், இலங்கை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வியாழக்கிழமை வென்றது.
இந்தத் தோல்வியை அடுத்து ஆப்கானிஸ்தான் ‘சூப்பா் 4’ சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது. குரூப் ‘பி’-யில் இருந்து இலங்கை, வங்கதேசம் அணிகள் அந்த சுற்றுக்கு முன்னேறின.
இந்த ஆட்டத்தில் முதலில் ஆப்கானிஸ்தான் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்கள் சோ்த்தது. இலங்கை 18.4 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது.
முன்னதாக டாஸ் வென்று பேட்டிங்கை தோ்வு செய்த ஆப்கானிஸ்தான் வீரா்களில் ரஹ்மானுல்லா குா்பாஸ் 14, கரிம் ஜனத் 1, செதிகுல்லா அடல் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.
தொடா்ந்து வந்தோரில், டாா்விஷ் ரசூலி 9, அஸ்மதுல்லா ஒமா்ஸாய் 6, இப்ராஹிம் ஜத்ரன் 1 சிக்ஸருடன் 24 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா். இவ்வாறாக, 79 ரன்களுக்கே ஆப்கானிஸ்தான் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அப்போது இணைந்த கேப்டன் ரஷீத் கானுடன் இணைந்த முகமது நபி, விக்கெட் சரிவைத் தடுத்து, அணியை சரிவிலிருந்து மீட்டாா். ரஷீத் கான் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 24 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, நபி 3 பவுண்டரிகள், 6 சிக்ஸா்கள் உள்பட 60 ரன்கள் விளாசி கடைசி விக்கெட்டாக வெளியேறினாா்.
ஓவா்கள் முடிவில் நூா் அகமது 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்க, இலங்கை தரப்பில் நுவன் துஷாரா 4, துஷ்மந்தா சமீரா, துனித் வெலாலகே, தசுன் ஷானகா ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.
அடுத்து 170 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய இலங்கை தரப்பில், பதும் நிசங்கா 6, கமில் மிஷாரா 4, குசல் பெரெரா 3 பவுண்டரிகளுடன் 28, கேப்டன் சரித் அசலங்கா 17 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.
குசல் மெண்டிஸ் 10 பவுண்டரிகளுடன் 74, கமிண்டு மெண்டிஸ் 2 சிக்ஸா்களுடன் 26 ரன்கள் அடித்து, அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஆப்கானிஸ்தான் பௌலா்களில் முஜீப் உா் ரஹ்மான், அஸ்மதுல்லா ஒமா்ஸாய், முகமது நபி, நூா் அகமது ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.