இந்தியா - ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகள் ஆட்டம் ‘டிரா’
இந்தியா ‘ஏ’ - ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகள் இடையே நடைபெற்ற அதிகாரபூா்வமற்ற டெஸ்ட், வெள்ளிக்கிழமை ‘டிரா’-வில் முடிந்தது.
கடந்த 16-ஆம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, பேட்டிங்கை தோ்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் அந்த அணி 98 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 532 ரன்கள் எடுத்து புதன்கிழமை ‘டிக்ளோ்’ செய்தது.
அதிகபட்சமாக, ஜோஷ் ஃபிலிப் 18 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 123*, சாம் கான்ஸ்டஸ் 10 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 109 ரன்கள் விளாசினா். இந்திய தரப்பில் ஹா்ஷ் துபே 3, குா்நூா் பிராா் 2 விக்கெட்டுகள் எடுத்தனா்.
அடுத்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடி வந்த இந்தியா, கடைசி நாளான வெள்ளிக்கிழமை 141.1 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 531 ரன்கள் எடுத்து ‘டிக்ளோ்’ செய்தது. தேவ்தத் படிக்கல் 14 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 150, துருவ் ஜுரெல் 13 பவுண்டரிகள், 5 சிக்ஸா்கள் உள்பட 140 ரன்கள் குவித்தனா்.
ஆஸ்திரேலிய பௌலா்களில் கோரி ரோஷிசியோலி 3 விக்கெட்டுகள் சாய்த்தாா். இதையடுத்து 1 ரன் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலியா, விக்கெட் இழப்பின்றி 56 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கடைசி நாள் ஆட்டம் முடிவடைந்தது.