சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில், மான்செஸ்டர் சிட்டி 2-0 கோல் கணக்கில் நபோலியை வெள்ளிக்கிழமை சாய்த்தது.
அந்த அணிக்காக எர்லிங் ஹால்ந்த் 56-ஆவது நிமிஷத்திலும், ஜெரிமி டோகு 65-ஆவது நிமிஷத்திலும் கோலடித்தனர்.
சாம்பியன்ஸ் லீக் போட்டியில் எர்லிங் ஹாலந்த், மான்செஸ்டர் சிட்டிக்காக தனது 50-ஆவது கோலை ஸ்கோர் செய்துள்ளார். 49-ஆவது முறையாக களமிறங்கியபோது இந்த மைல் கல்லை எட்டியிருக்கும் ஹாலந்த், சாம்பியன்ஸ் லீக் போட்டியில் அதிவேகமாக 50-ஆவது கோல் அடித்தவராக சாதனை படைத்தார்.
இதற்கு முன், மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் ரியல் மாட்ரிட் அணிகளுக்காக விளையாடிய முன்னாள் வீரர் ரூட் வான் நிஸ்டெல்ரூய் 62-ஆவது ஆட்டத்தில் 50-ஆவது கோல் அடித்ததே சாதனையாக இருந்தது.
மறுபுறம் நபோலி அணி, அந்நிய மண்ணில் இத்துடன் 13 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் நிலையில், எதிலுமே வென்றதில்லை.
இதனிடையே, மற்றொரு ஆட்டத்தில் பார்சிலோனா 2-1 கோல் கணக்கில் நியூகேஸிலை வீழ்த்தியது.
பார்சிலோனாவுக்காக மார்கஸ் ராஷ்ஃபோர்டு, முதலில் 58-ஆவது நிமிஷத்திலும், பிறகு 67-ஆவது நிமிஷத்திலும் கோலடித்தார். விறுவிறுப்பான கடைசி நிமிஷத்தில் (90') நியூகேஸிலுக்காக ஆண்டனி கோர்டான் ஆறுதல் கோல் ஸ்கோர் செய்தார்.
சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பார்சிலோனா அணி, இங்கிலாந்து கிளப்பை வீழ்த்தி சீசனை தொடங்குவது கடந்த 2001-க்குப் பிறகு இதுவே முதல் முறையாகும்.
மறுபுறம் நியூகேஸில், கடந்த 2023 அக்டோபரில் பிஎஸ்ஜி அணியை வென்ற பிறகு, தனது சொந்த மண்ணில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் ஆட்டங்களில் இதுவரை வென்றதில்லை.
இந்த ஆட்டத்தில் 2 கோல்கள் அடித்த மார்கஸ் ராஷ்ஃபோர்டு, பார்சிலோனாவுக்காக அறிமுக ஆட்டத்தில் 2 அல்லது அதற்கு மேல் கோல்கள் அடித்த 5-ஆவது வீரராக பெருமை பெற்றார்.
இதர ஆட்டங்களில், ஸ்போர்டிங் - கைராட்டையும் (4-1), எய்ன்டிராட் ஃப்ராங்க்ஃபர்ட் - கலாடசரேவையும் (5-1) வென்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.