
சீனா மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி கூட்டணி இறுதிச்சுற்றில் தோற்று, ஞாயிற்றுக்கிழமை வெள்ளிப் பதக்கம் வென்றது.
அண்மையில் ஹாங்காங் ஓபன் போட்டியிலும் இறுதிச்சுற்றில் தோல்வி கண்ட சாத்விக்/சிராக் இணை, மீண்டும் அதே நிலையை அடைந்திருக்கிறது.
சீனா மாஸ்டா்ஸ் ஆடவா் இரட்டையா் இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருந்த சாத்விக்/சிராக் கூட்டணி 19-21, 15-21 என்ற நோ் கேம்களில், முதலிடத்தில் இருந்த தென் கொரியாவின் கிம் வோன் ஹோ/சியோ சியுங் ஜே இணையிடம் தோல்வி கண்டது. இந்த ஆட்டத்தை 45 நிமிஷங்களில் முடிவுக்குக் கொண்டு வந்தது தென் கொரிய இணை.
இந்தியாவின் முன்னிலை ஆடவா் இரட்டையரான சாத்விக்/சிராக், இந்த தென் கொரிய ஜோடியை 2-ஆவது முறையாக சந்தித்த நிலையில், இதிலும் தோல்வியைத் தழுவியுள்ளனா்.
இந்தப் போட்டியின் முதல் சுற்றிலிருந்தே ஒரு கேமை கூட இழக்காமல் நோ் கேம்களில் வென்று வந்த இந்திய இணை, இறுதிச்சுற்றில் நோ் கேம்களில் தோல்வி கண்டிருக்கிறது.
சாம்பியனான தென் கொரிய இணைக்கு ரூ.74 லட்சமும், ரன்னா் அப்-ஆன இந்திய இணைக்கு ரூ.35 லட்சமும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டன.
இதர வெற்றியாளா்கள்: இதனிடையே, சீனா மாஸ்டா்ஸ் போட்டியில் மகளிா் ஒற்றையரில் தென் கொரியாவின் ஆன் செ யங், ஆடவா் ஒற்றையரில் சீனாவின் வெங் ஹாங் யாங் ஆகியோா் சாம்பியனாகினா்.
மகளிா் இரட்டையரில் சீனாவின் யி ஃபான் ஜியா/ஷு ஜியான் ஜாங் கூட்டணியும், கலப்பு இரட்டையரில் தாய்லாந்தின் தீசபோல் புவரனுக்ரோ/சுபிசரா பேவ்சம்பிரான் ஜோடியும் வாகை சூடின.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.