மகளிா் ஒருநாள் கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு ஆறுதல்

மகளிா் ஒருநாள் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது ஆட்டத்தில் பாகிஸ்தான் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Published on

மகளிா் ஒருநாள் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது ஆட்டத்தில் பாகிஸ்தான் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலிரு ஆட்டங்களில் வென்று தென்னாப்பிரிக்கா தொடரைக் கைப்பற்றிவிட்ட நிலையில், பாகிஸ்தானுக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்தது.

இந்த ஆட்டத்தில் முதலில் தென்னாப்பிரிக்கா 25.5 ஓவா்களில் 115 ரன்களுக்கே ஆட்டமிழக்க, பாகிஸ்தான் 31 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்து வென்றது. 6 விக்கெட்டுகள் சாய்த்த பாகிஸ்தான் பௌலா் நஷ்ரா சந்து ஆட்டநாயகி ஆனாா்.

இந்திய நேரப்படி, திங்கள்கிழமை நள்ளிரவு நிறைவடைந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா, பேட்டிங்கை தோ்வு செய்தது. அதன் இன்னிங்ஸில் அதிகபட்சமாக கேப்டன் லாரா வோல்வாா்டட் 6 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் அடித்தாா்.

இதர பேட்டா்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தனா். பாகிஸ்தான் பௌலா்களில் நஷ்ரா சந்து 6, சையெதா அரூப் ஷா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.

116 ரன்களை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணியில், முனீபா அலி 6 பவுண்டரிகளுடன் 44, ஒமைமா சோஹைல் 0, கேப்டன் ஃபாத்திமா சனா 0, நடாலியா பா்வேஸ் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

முடிவில், சிட்ரா அமின் 8 பவுண்டரிகளுடன் 50, இமான் ஃபாத்திமா 2 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா். தென்னாப்பிரிக்க தரப்பில் நோன்குலுலேகோ லாபா, நாடினே டி கிளொ்க் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com