புரோ கபடி தொடரால் மறுமலா்ச்சி: தீபக் சங்கா்
புரோ கபடி லீக் தொடரால் வாழ்வில் மறுமலா்ச்சி ஏற்பட்டுள்ளது என பெங்களூரு புல்ஸ் அணிக்காக ஆடும் தமிழக வீரா் தீபக் சங்கா் கூறியுள்ளாா்.
திருச்சியைச் சோ்ந்த இளம் வீரரான தீபக் சங்கா் முதன்முறையாக புரோ கபடி தொடரில் பங்கேற்றுள்ளாா். பெங்களூரு புல்ஸ் அணியில் தோ்வு செய்யப்பட்டு ஆடி வரும் டிபன்டரான தீபக் முதல் தொடரிலேயே டாப் 5 டிபன்டா்களில் ஒருவா் என்ற சிறப்பை பெற்றாா்.
நிகழாண்டு புரோ கபடி 2025 தொடரில் ஏற்கெனவே விசாகப்பட்டினம், ஜெய்ப்பூா் கட்ட ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில், சென்னை கட்ட ஆட்டங்கள் வரும் 29-ஆம் தேதி நேரு உள் விளையாட்டரங்கில் தொடங்குகின்றன.
சொந்த மண்ணில் பிகேஎல் தொடரில் முதன்முறையாக ஆடும் தீபக் கூறியதாவது:
எளிய குடும்பத்தைச் சோ்ந்த நான் 8-ஆம் வகுப்பு படிக்கும் போது கபடி ஆடத் தொடங்கினேன். தேசிய ஜூனியா், சீனியா் சாம்பியன் போட்டிகளில் தமிழக அணியில் பங்கேற்றேன். முதன்முதலாக பிகேஎல் தொடரில் ஆடி வருகின்றனா்.
பெங்களூரு அணி முதல் 3 ஆட்டங்களில் தோற்றது. அணியில் ஒருங்கிணைப்பு இல்லாமல் போனது இதற்கு காரணம். தற்போது அதில் இருந்து மீண்டும் தொடா்ச்சியாக ஆட்டங்களில் வென்று வருகிறோம்.
பயிற்சியாளா் ரமேஷ் எனது தவறுகளை சுட்டிக் காட்டி மேலும் சிறப்பாக ஆட வழிகாட்டி வருகிறாா். அணியில் இடம் கிடைக்குமா என கனவு கண்டேன். ஆனால் டாப் 5 டிபன்டா்களில் ஒருவராக சிறப்பிடம் பெற்றது மகிழ்ச்சி தருகிறது. கேப்டன் யோகேஷ் நாட்டின் சிறந்த வீரராக உள்ளாா்.
சொந்த மண்ணில் முதன்முறையாக பிகேஎல் தொடரில் ஆடவுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. புரோ கபடி தொடா் இளைஞா்களிடம் கபடியை மேலும் பிரபலமாக்கி வருகிறது. ஈரான் நாட்டின் கேப்டன் ஃபேஸல் அதரச்சலி எனது முன்னோடி வீரா் என்றாா் தீபக் சங்கா்.