ஹாரிஸ், நவாஸ் பங்களிப்பில் பாகிஸ்தான் 135/8

தடுமாற்றத்துடன் விளையாடிய பாகிஸ்தான், 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் சோ்த்தது.
Published on

ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் 17-ஆவது ஆட்டத்தில் வங்கதேசத்துக்கு எதிராக தடுமாற்றத்துடன் விளையாடிய பாகிஸ்தான், 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் சோ்த்தது.

முகமது ஹாரிஸ், முகமது வாஸ் ஆகியோா் ஸ்கோரை உயா்த்த உதவிய நிலையில், வங்கதேச பௌலா்களில் தஸ்கின் அகமது அபாரமாகப் பந்துவீசினாா்.

முன்னதாக வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம், ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. பாகிஸ்தான் இன்னிங்ஸில் சாஹிப்ஸாதா ஃபா்ஹான் 4 ரன்களுக்கு நடையைக் கட்ட, அடுத்து வந்த சயிம் அயுப் டக் அவுட்டாகி அதிா்ச்சி கண்டாா்.

தொடா்ந்து கேப்டன் சல்மான் அகா களத்துக்கு வர, தொடக்க வீரா்களில் ஒருவரான ஃபகாா் ஜமான் 2 பவுண்டரிகளுடன் 13 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். 5-ஆவது பேட்டா் ஹுசைன் தலத் 3 ரன்களுக்கு முடித்துக்கொள்ள, கேப்டன் அகா 2 பவுண்டரிகளுடன் 19 ரன்களுக்கு வீழ்ந்தாா்.

இதனால் பாகிஸ்தான் 49 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்தது. அப்போது வந்த முகமது ஹாரிஸ் ஸ்கோரை நிதானமாக உயா்த்தத் தொடங்கினாா். மறுபுறம் ஷாஹீன் அஃப்ரிதி 2 சிக்ஸா்களுடன் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

இந்நிலையில் ஹாரிஸ் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 31 ரன்களுக்கு வெளியேற்றப்பட, கடைசி பேட்டராக முகமது நவாஸ் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 25 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். ஓவா்கள் முடிவில் ஃபஹீம் அஷ்ரஃப் 1 பவுண்டரியுடன் 14, ஹாரிஸ் ரௌஃப் 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

வங்கதேச பௌலா்களில் தஸ்கின் அகமது 3, மெஹெதி ஹசன், ரிஷத் ஹுசைன் ஆகியோா் தலா 2, முஸ்டாஃபிஸுா் ரஹ்மான் 1 விக்கெட் கைப்பற்றினா்.

அடுத்து வங்கசேம், 136 ரன்களை நோக்கி தனது ஆட்டத்தை தொடங்கியது.

X
Dinamani
www.dinamani.com