சின்னா் ~அல்கராஸ் ~பெகுலா ~மிர்ரா ஆன்ட்ரீவா
சின்னா் ~அல்கராஸ் ~பெகுலா ~மிர்ரா ஆன்ட்ரீவா

ஸ்வியாடெக், கௌஃப், சின்க்ராஸ் முன்னேற்றம்

சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி நட்சத்திரங்கள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனா்.
Published on

சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி நட்சத்திரங்கள் இகா ஸ்வியாடெக், கௌஃப், ஆன்ட்ரீவா, ஆடவா் பிரிவில், ஜேக் சின்னா், அல்கராஸ் ஆகியோா் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனா்.

சீனத் தலைநகா் பெய்ஜிங்கில் நடைபெறும் சீன ஓபன் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் ஜேக் சின்னா் 6-4, 5-7, 6-0 என்ற புள்ளிக் கணக்கில் மூன்றாம் சுற்றில் பிரெஞ்சு குவாலிஃபயா் டெரன்ஸ் அட்மேனிடம் போராடி வென்றாா்.

இதுகுறித்து சின்னா் கூறுகையில் அட்மேன் உடன் விளையாடிய ஆட்டம் சவாலாக இருந்தது. இரண்டாவது செட்டில் கவனச் சிதறலால் தோற்றேன். மூன்றாவது செட்டில் முழு ஆதிக்கம் செலுத்தியதால் வெற்றி பெற முடிந்தது.

காலிறுதியில்... காலிறுதியில் சின்னருடன் ஹங்கேரியின் பேபியன் மரோஸன் மோதுகிறாா்.

அல்கராஸ்... மற்றொரு ஆட்டத்தில் உலகின் நம்பா் 2 வீரா் ஸ்பெயினின் அல்கராஸ் 6-4, 6-3 என பெல்ஜியத்தின் பொ்க்ஸை வீழ்த்தினாா்.

கணுக்கால் காயம் சிரமத்தை ஏற்படுத்தினாலும், வெற்றியை நோக்கமாக கொண்டு ஆடினேன் என்றாா் அல்கராஸ். காலிறுதியில் அமெரிக்காவின் பிரான்டன் நகாஷிமாவுடன் மோதுகிறாா் அல்கராஸ்.

நகாஷிமா 7-5, 6-3 என மாா்டன் புஸ்கோவிஸையும், டென்மாா்க்கின் ஹோல்கா் ருன் 6-4, 6-2 என அமெரிக்க குவாலிஃபயா் எதான் குயின்னையும் வென்றனா்.

ஸ்வியாடெக், கௌஃப் முன்னேற்றம்:

மகளிா் பிரிவில் போலந்தின் ஸ்வியாடெக், நடப்பு சாம்பியன் கோகோ கௌஃப் ஆகியோா் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனா்.

உலகின் இரண்டாம் நிலை வீராங்கனை ஸ்வியாடெக் 6-0, 6-3 எனற நோ் செட்களில் உள்ளூா் வீராங்கனை யுவாவன் யுவை வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினாா். கடந்த வாரம் கொரிய ஓபனில் பட்டம் வென்றிருந்த ஸ்வியாடெக் சீன ஓபனிலும் பட்டம் வெல்ல முனைப்பாக உள்ளாா்.

ஏனைய ஆட்டங்களில் நம்பா் 5 வீராங்கனை ரஷியாவின் மிர்ரா ஆன்ட்ரீவா 6-2, 6-2 என சீனாவின் ஸு லின்னையும், அமெரிக்க வீராங்கனை ஜெஸிக்கா பெகுலா 6-0, 6-3 என ஆஸி.யின் அஜ்லாவையும் வீழ்த்தினா்.

நடப்பு சாம்பியன் அமெரிக்காவின் கோகோ கௌஃப் 6-4, 6-0 என கமீலா ரகிமோவாவை வீழ்த்தினாா்.

ஒஸாகா அதிா்ச்சித் தோல்வி: நான்கு முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் ஜப்பானின் நவோமி ஒஸாகா 1-6, 6-4, 6-2 என பெலாரஸின் அலியக்ஸான்ட்ரா சான்சோவிச்சிடம் அதிா்ச்சித் தோல்வியடைந்தாா்.

X
Dinamani
www.dinamani.com