ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா - பாகிஸ்தான் ஆட்டங்களின்போது விதிகளை மீறிச் செயல்பட்டதாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் பெளலர் ஹாரிஸ் ரெளஃப் ஆகியோருக்கு, ஆட்ட ஊதியத்தில் 30 சதவீதத்தை ஐசிசி அபராதம் விதித்தது.
கடந்த 14-ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான குரூப் சுற்று ஆட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு துணை நிற்பதாகவும், பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியை ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினருக்கு அர்ப்பணிப்பதாகவும் கூறினார்.
இது அரசியல் ரீதியிலான கருத்து என்று கூறி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவருக்கு எதிராக ஐசிசியிடம் புகார் அளித்தது. அதுதொடர்பாக சூர்யகுமாரிடம் வியாழக்கிழமை விசாரித்த ஐசிசி போட்டி நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன், இதுபோன்ற அரசியல் ரீதியிலான கருத்துகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தினார்.
எனினும் சூர்யகுமாரின் நடத்தைக்காக அவருக்கு, சம்பந்தப்பட்ட ஆட்டத்தின் ஊதியத்தில் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்படது.
ஹாரிஸுக்கும் அபராதம்:
கடந்த 21-ஆம் தேதி இந்தியாவுக்கு எதிரான சூப்பர் 4 ஆட்டத்தின்போது, அரை சதம் அடித்த பாகிஸ்தானின் சாஹிப்ஜாதா ஃபர்ஹான், தனது பேட்டை வைத்து துப்பாக்கியால் சுடுவது போன்று கொண்டாடினார்.
ஃபீல்டிங் செய்த பெளலர் ஹாரிஸ் ரெளஃப், ஆபரேஷன் சிந்தூரின்போது 6 இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் பொய்யாகக் கூறியதை குறிப்பிடும் வகையில் இந்திய ரசிகர்களை நோக்கி செய்கைகள் காட்டினார்.
இருவரின் செயலும் ஆத்திரத்தை தூண்டும் வகையில் இருப்பதாக ஐசிசியிடம், பிசிசிஐ புகார் அளித்தது. அவர்கள் இருவரிடமும் ஐசிசி போட்டி நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டார். அப்போது தாங்கள் தவறாக ஏதும் செய்யவில்லை என்று அவர்கள் எழுத்து பூர்வமாக பதிலளித்தனர்.
இருப்பினும், ஹாரிஸுக்கு ஆட்ட ஊதியத்தில் 30 சதவீதம் அபராதம் விதித்த நடுவர் ரிச்சர்ட்சன், சாஹிப்ஜாதாவுக்கு எச்சரிக்கை மட்டும் வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.