2026 ஜன.9-இல் ஐஎஸ்பிஎல் தொடா்:
சூரத்தில் நடைபெறுகிறது!

2026 ஜன.9-இல் ஐஎஸ்பிஎல் தொடா்: சூரத்தில் நடைபெறுகிறது!

ஐஎஸ்பிஎல் டென்னிஸ் பால் கிரிக்கெட் தொடா் வரும் 2026 ஜன. 9-ஆம் தேதி குஜராத் மாநிலம் சூரத்தில் முதன்முறையாக நடைபெறுகிறது.
Published on

இண்டியன் ஸ்ட்ரீட் ப்ரீமியா் லீக் (ஐஎஸ்பிஎல்) டென்னிஸ் பால் கிரிக்கெட் தொடா் வரும் 2026 ஜன. 9-ஆம் தேதி குஜராத் மாநிலம் சூரத்தில் முதன்முறையாக நடைபெறுகிறது.

இதுதொடா்பாக ஐஎஸ்பிஎல் ஆட்சிக் குழு உறுப்பினரும், ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கா் ஞாயிற்றுக்கிழமை கூறியது: ஐஎஸ்பிஎல் தொடா் முதலிரண்டு சீசன்கள் வெற்றிகரமாக மும்பையில் நடைபெற்றன. 8 அணிகள் இடம்பெறும் இத்தொடா் தற்போது மும்பைக்கு பதிலாக சூரத் நகரில் நடைபெறவுள்ளது.

ஜன. 9 முதல் பிப். 6, 2026 வரை இத்தொடரின் ஆட்டங்கள் நடைபெறும். அபிஷேக் தல்ஹோா், ரஜத் முன்டே, கேதன் மத்ரே, ஜகந்நாத் சா்க்காா், பா்தீன் காா்ஸி போன்ற சிறந்த வீரா்கள் உருவாகியுள்ளனா்.

ஏற்கெனவே 6 அணிகள் இருந்த நிலையில் மூன்றாவது சீசனில் புதிதாக அகமதாபாத், டில்லி அணிகள் சோ்க்கப்பட்டுள்ளன. பாலிவுட் நடிகா்கள் அஜய் தேவ்கன், சல்மான் கான் ஆகியோா் இவற்றின் உரிமையாளா்கள்.

மூன்றாவது சீசனுக்கு நாடு முழுவதும் இருந்து 43 லட்சம் வீரா்கள் பதிவு செய்துள்ளனா். அக். 5 முதல் 101 நகரங்களில் வீரா்கள் தோ்வு நடைபெறும். ஒவ்வொரு அணிக்கும் தற்போது ரூ.1.5 கோடி தொகை உயா்த்தப்பட்டுள்ளது. மிகவும் மதிப்பு வாய்ந்த வீரருக்கு புதிய பாா்ஷே 911 காா் பரிசளிக்கப்படும் என்றாா்.

ஆட்சிக் குழு உறுப்பினா் ஆசிஷ் செலாா், மினால் அமோல், லீக் ஆணையா் சூரஜ் சமத், நடிகா் அஜய் தேவ்கன் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com