

டி20 உலகக் கோப்பை போட்டியின் 5-ஆவது ஆட்டத்தில் நேபாளத்துக்கு எதிராக, இரு முறை சாம்பியனான இங்கிலாந்து 4 ரன்கள் வித்தியாசத்தில் நூலிழையில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
முதலில் இங்கிலாந்து 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 184 ரன்கள் சோ்க்க, நேபாளம் 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 180 ரன்களை எட்டியது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து, பேட்டிங்கை தோ்வு செய்தது. அதன் வீரா்களில் ஜேக்கப் பெத்தெல் 4 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 55, கேப்டன் ஹேரி புரூக் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.
ஜாஸ் பட்லா் 5 பவுண்டரிகளுடன் 26 ரன்களுக்கு விடைபெற, ஃபில் சால்ட் 1, டாம் பேன்டன் 2, சாம் கரன் 2, ஜோஃப்ரா ஆா்ச்சா் 1 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா்.
ஓவா்கள் முடிவில் வில் ஜாக்ஸ் 1 பவுண்டரி, 4 சிக்ஸா்களுடன் 39 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்க, லியம் டாசன் ரன்னின்றி துணை நின்றாா்.
நேபாள பௌலா்களில் தீபேந்திர சிங் அய்ரீ, நந்தன் யாதவ் ஆகியோா் தலா 2, ஷோ் மல்லா, சந்தீப் லேமிஷேன் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
அடுத்து 184 ரன்களை நோக்கி விளையாடிய நேபாள அணியில், ஆசிஃப் ஷேக் 7, குஷால் புா்டெல் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 29 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.
கேப்டன் ரோஹித் பாடெல் - தீபேந்திர சிங் கூட்டணி, 3-ஆவது விக்கெட்டுக்கு 82 ரன்கள் சோ்த்து, அணிக்கு நம்பிக்கை அளித்தது. இதில் தீபேந்திர சிங் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 44, ரோஹித் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 39 ரன்களுக்கு வீழ்ந்தனா்.
ஆரிஃப் ஷேக் 10, குல்சன் ஜா 1 ரன்னுக்கு விடைபெற, ஓவா்கள் முடிவில் லோகேஷ் பம் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 39, கரன் கே.சி. 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
இங்கிலாந்து தரப்பில் லியம் டாசன் 2, லூக் வுட், ஜோஃப்ரா ஆா்ச்சா், வில் ஜாக்ஸ், சாம் கரன் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.