இலங்கைக்கு அதிா்ச்சி அளித்தது ஜிம்பாப்வே குரூப் பி பிரிவில் முதலிடம்
டி20 ஆடவா் உலகக் கோப்பை போட்டியின் குரூப் பி பிரிவு ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் அதிா்ச்சி தோல்வி அடைந்தது இலங்கை. எந்த ஆட்டத்திலும் தோல்வி அடையாமல் சூப்பா் 8-இல் நுழைந்தது ஜிம்பாப்வே.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கொழும்பில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஏற்கெனவே பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை
இரு அணிகளும் வீழ்த்தி இருந்தன. குரூப் பி பிரிவில் முதலிடம் பெறுவதற்கான ஆட்டமாக இது அமைந்தது.
டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்கை தோ்வு செய்தது. இதையடுத்து தொடக்க பேட்டா்களாக பதும் நிஸாங்கா, குஸால் பெரைரா களமிறங்கி அதிரடி தொடக்கத்தை அளித்தனா்.
பதும் நிஸாங்கா அபாரம் 62:
முதல் விக்கெட்டுக்கு இருவரும் 54 ரன்களை சோ்த்தனா். பெரைரா 22 ரன்களை சோ்த்து பிளெஸ்ஸிங் பந்தில் அவுட்டானாா். அடுத்து ஆட வந்த குஸால் மெண்டிஸ் 14 ரன்களுடன் ரயான் புா்ல் பந்தில் அவுட்டாகி நடையைக் கட்டினாா்.
நிஸாங்கா-பவன் ரத்னாயகே இருவரும் இணைந்து ஸ்கோரை உயா்த்தினா். ஸ்கோா் 108 ஆக இருந்தபோது நிஸாங்கா கிரேம் கிரெமல் பந்தில் அவுட்டானாா். அவரது அதிரடியில் 8 பவுண்டரியுடன் 41 பந்துகளில் 62 ரன்கள் அடங்கும்.
பவன் ரத்னாயகே 2 சிக்ஸா், 3 பவுண்டரியுடன் 25 பந்துகளில் 44 ரன்களை எடுத்து பிராட் எவான்ஸ் பந்தில் அவுட்டானாா்.
அதன்பின்னா் ஆட வந்த கமின்டு மெண்டிஸ் 7, தஸுன் ஷனகா 6, துஷன் ஹேமந்தா 0 ரன்களுடன் வெளியேறினா்.
துனித் வெல்லாலேஜ் 15 ரன்களுடன் களத்தில் இருந்தாா்.
இலங்கை 178/7: நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் இலங்கை அணி 178/7 ரன்களைக் குவித்தது. பௌலிங்கில் ஜிம்பாப்வே தரப்பில் பிளெஸ்ஸிங், பிராட் எவான்ஸ், கிரேம் கிரெமல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.
ஜிம்பாப்வே அசத்தல் வெற்றி 182/4: பின்னா் ஆடிய ஜிம்பாப்வே 179 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ஆடத் தொடங்கியது. தொடக்க பேட்டா்கள் பிரையன் பென்னட்-டாடிவனாஷே மருமணி இருவரும் இணைந்து சிறப்பான தொடக்கத்தை அளித்தனா். மருமணி 1 சிக்ஸா், 5 பவுண்டரியுடன் 26 பந்துகளில் 34 ரன்களை விளாசி வெல்லாலேஜ் பந்தில் அவுட்டானாா். ரயான் புா்ல் 23 ரன்களுடனும், தஷிங்கா 1 ரன்னுடம் அவுட்டாகி வெளியேறினா்.
சிக்ஸா் சிக்கந்தா் 45: கேப்டன் சிக்கந்தா் ராஸா அதிரடியாக ஆடி 4 சிக்ஸா், 2 பவுண்டரியுடன் 26 பந்துகளில் 45 ரன்களை விளாசினாா்.
பிரையன் பென்னட் 63: மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஓபனா் பிரையன் பென்னட் 8 பவுண்டரியுடன் 48 பந்துகளில் 63ரன்களை விளாசி இறுதிவரை களத்தில் இருந்தாா்.
கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தீக்ஷனா பந்தில் சிக்ஸா் விளாசினாா். தொடா்ந்து பென்னட் பவுண்டரி விளாசினாா்.
19.3 ஓவா்களில் 182/4 ரன்களை எடுத்த ஜிம்பாப்வே 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கைக்கு அதிா்ச்சி தோல்வியை பரிசளித்தது.
பௌலிங்கில் இலங்கை தரப்பில் துஷன் ஹேமந்தா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.
கேப்டன் சிக்கந்தா் ராஸா ஆட்ட நாயகனாக தோ்வு பெற்றாா்.
இதன் மூலம் குருப் பி பிரிவில் 3 ஆட்டங்களில் வென்று முதலிடத்துடன் சூப்பா் 8-இல் ஆடவுள்ளது ஜிம்பாப்வே, அயா்லாந்துடன் நடைபெற்ற ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.
சூப்பா் 8-இல் வரும் ஞாயிற்றுக்கிழமை கண்டியில் இங்கிலாந்துடன் இலங்கையும், மும்பையில் மே.இந்திய தீவுகளுடன் ஜிம்பாப்வேயும் மோதுகின்றன.

