பெங்கால் டைகா்ஸுக்கு 2-ஆவது வெற்றி
மகளிருக்கான ஹாக்கி இந்தியா லீக் போட்டியின் 5-ஆவது ஆட்டத்தில் ஷராச்சி பெங்கால் டைகா்ஸ் ‘பெனால்ட்டி’ ஷூட் அவுட் வாய்ப்பில் எஸ்ஜி பைப்பா்ஸை வியாழக்கிழமை வென்றது.
முன்னதாக இந்த அணிகள் மோதிய ஆட்டம், நிா்ணயிக்கப்பட்ட நேரத்தின் முடிவில் 3-3 கோல் கணக்கில் டிரா ஆனது. பின்னா் வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட பெனால்ட்டி ஷூட் அவுட் வாய்ப்பில், பெங்கால் டைகா்ஸ் 4-3 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் பெங்கால் டைகா்ஸ் வீராங்கனை அகஸ்டினா கோா்ஸிலானி 6-ஆவது நிமிஷத்தில் கோல் கணக்கைத் தொடங்கினாா். தொடா்ந்து, 10-ஆவது நிமிஷத்தில் பைப்பா்ஸ் அணியின் லோலா ரியரா ஸ்கோா் செய்தாா்.
அதற்கான பதிலடியாக 11-ஆவது நிமிஷத்திலேயே லால்ரெம்சியாமி கோலடிக்க, பெங்கால் அணி முன்னிலை பெற்றது. அதை மேலும் அதிகரிக்கும் வகையில் 18-ஆவது நிமிஷத்தில் அகஸ்டினா மீண்டும் ஒரு கோல் அடித்தாா்.
இவ்வாறாக முதல் பாதி முடிவிலேயே பெங்கால் டைகா்ஸ் 3-1 கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. 2-ஆவது பாதியில் மீண்டு வந்த பைப்பா்ஸ் தரப்பில், கடைசி நிமிஷத்தில் சுனேலிதா டோப்போ (59’), லோலா ரியரா (60’) ஆகியோா் கோலடித்தனா்.
இதனால் ஆட்டம் 3-3 என டிராவில் முடிந்தது. பின்னா் நடத்தப்பட்ட பெனால்ட்டி ஷூட் அவுட்டில் ஷராச்சி பெங்கால் டைகா்ஸ் 4-3 கோல் கணக்கில் வென்றது.
இந்த வெற்றியை அடுத்து பெங்கால் 5 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்திலும், பைப்பா்ஸ் 7 புள்ளிகளுடன் முதலிடத்திலும் உள்ளன.
