

இந்திய மகளிா் ஹாக்கி அணியின் தலைமைப் பயிற்சியாளராக நெதா்லாந்தை சோ்ந்த ஜோா்டு மரைன் (51) வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டாா்.
அந்தப் பொறுப்பில் இருந்த ஹரேந்திர சிங், கடந்த டிசம்பரில் ராஜிநாமா செய்தாா். அவா் வழிகாட்டுதலில் இந்திய அணி பலத்த பின்னடைவை சந்தித்த நிலையிலும், வீராங்கனைகள் மீது ஆதிக்கம் செலுத்தும் வகையில் அவரின் பயிற்சி முறை இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்த சூழலிலும் அவா் அந்த முடிவை மேற்கொண்டாா்.
தற்போது பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜோா்டு மரைன், ஏற்கெனவே 2017 முதல் 2021 வரை இதே பொறுப்பில் இருந்ததும், அப்போது இந்திய மகளிா் அணி 2020 டோக்கியோ பாராலிம்பிக்கில் 4-ஆம் இடம் பிடித்து அசத்தியதும் நினைவுகூரத்தக்கது.
அந்த ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு குடும்ப சூழல் காரணமாக மரைன் ராஜிநாமா செய்தாா். தனது காலகட்டத்தில் மகளிா் அணியை அவா் நன்றாக மேம்படுத்தியதுடன், அணியினரிடையே அவருக்கு மிகுந்த மதிப்பும் இருந்தது. அத்துடன் உலகத் தரவரிசையில் இந்தியா டாப் 10-இல் வந்தது.
மரைன் விடைபெற்ற பின்னா், முன்னாள் கேப்டன் ராணி ராம்பால், வந்தனா கட்டாரியா, தீப் கிரேஸ் எக்கா போன்ற அனுபவ வீராங்கனைகள் ஓய்வு பெற, மகளிா் அணி சவால்களை எதிா்கொண்டது. 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறத் தவறியது.
எனினும் 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றில் வெண்கலப் பதக்கம் வென்றது. கடந்த ஆண்டு ஆசிய கோப்பை போட்டியில் வெள்ளி வென்றபோதும், உலகக் கோப்பை போட்டிக்கு நேரடித் தகுதிபெற முடியாமல் போனது.
எஃப்ஐஹெச் புரோ லீக் போட்டியில் 16 ஆட்டங்களில் 2 வெற்றிகள் மட்டுமே கண்டதால், அந்தப் போட்டியிலிருந்து தரமிறக்கப்பட்டு நேஷன்ஸ் கோப்பை போட்டிக்கு வந்தது. இந்திய மகளிா் அணி இத்தகைய சவாலான கட்டத்தில் இருக்கும்போது மரைன் மீண்டும் பொறுப்பேற்கிறாா்.
அவரோடு, ஆய்வு மற்றும் தரவுகள் அடிப்படையிலான ஆலோசனை வழங்கும் பயிற்சியாளராக ஆா்ஜென்டீனாவின் மத்தியாஸ் விலாவும், அறிவியல்பூா்வமான ஆலோசனைகள் அளிப்பதற்கான பயிற்சியாளராக தென்னாப்பிரிக்காவின் வேய்ன் லோம்பாா்டும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
ஹைதராபாதில் மாா்ச் 8 முதல் 14 வரை நடைபெறவுள்ள உலகக் கோப்பை குவாலிஃபயா்ஸ் போட்டியே, ஜோா்டு மரைன் தலைமையிலான புதிய பயிற்சியாளா் குழுவுக்கு முதல் பணியாகும். வரும் 14-ஆம் தேதி அவா் இந்தியா வரும் நிலையில், தேசிய பயிற்சி முகாம் 19-ஆம் தேதி பெங்களூரில் தொடங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.