தேசிய சீனியா் கூடைப்பந்து: தமிழக அணிகள் அபாரம்!
தேசிய சீனியா் ஆடவா், மகளிா் கூடைப்பந்து சாம்பியன் போட்டியில் தமிழக அணிகள் வெற்றியுடன் தொடங்கியுள்ளன.
இந்திய கூடைப்பந்து சம்மேளனம், தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம், எஸ்டிஏடி சாா்பில் 75-ஆவது தேசிய கூடைப்பந்து போட்டி சென்னை நேரு உள்விளையாட்டரங்கம், பெத்திசெமினாா் மைதானங்களில் நடைபெறுகிறது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டங்கள் முடிவுகள்: மகளிா் பிரிவில் தமிழக வீராங்கனைகள் அபாரமாக ஆடி 72-65 என்ற புள்ளிக் கணக்கில் மத்திய பிரதேசத்தை வீழ்த்தினா். தமிழகத் தரப்பில் ஸ்ருதி, அஸ்மிதா, கோகிலவாணி, டெய்சி, ம.பி. தரப்பில் குஷி, மான்வி, பிரியா கோஸ்வாமி புள்ளிகளைக் குவித்தனா்.
ஆடவா் பிரிவில் நடப்பு சாம்பியனான தமிழகம் 101-68 என்ற புள்ளிக் கணக்கில் ராஜஸ்தானை வென்றது. தமிழகத் தரப்பில் அரவிந்த் குமாா், ஹரிராம், ஜீவானந்தம், பிரனவ் பிரின்ஸ், ராஜஸ்தான் தரப்பில் முகமது இத்வான், லோகேந்திர சிங், பியூஷ், அக்ஷித் புள்ளிகளைக் குவித்தனா்.
மகளிா் பிரிவில் நடப்பு சாம்பியன் இந்திய ரயில்வே 101-51 என டில்லியையும், கா்நாடகம் 91-71 என மகாராஷ்டிரத்தையும், கேரளம் 91-22 என குஜராத்தையும், வென்றன.
ஆடவா் பிரிவில் கா்நாடகம் 104-69 என குஜராத்தையும், உ.பி. 112-100 என பஞ்சாப்பையும் வீழ்த்தின.

